நிதி நிலைமை சீரானதும் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் தேவையான இடங்களில் உள்ள காலி பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு
புதுக்கோட்டை சமஸ்தானத்தின் ஒன்பதாவது மன்னராகத் திகழ்ந்த ராஜ ராஜகோபால தொண்டைமானின் நூற்றாண்டு விழா நேற்று முதல் வருகின்ற 26ம் தேதி வரை கொண்டாடப்படும் நிலையில் இன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மாலை, அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்கள் சந்திப்பு
அதன் பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர் கூறுகையில், ‘ பத்தாண்டு காலமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அப்போதைய அதிமுக அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு தமிழக முதல்வர், கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆண்டும் 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 400 கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கீடு செய்துள்ளார். இதனை கொண்டு நகராட்சி, மாநகராட்சிகளில் அவசர பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் அனைத்து நிறைவேற்றப்பட்டு வருகிறது என கூறினார்.
காலி பணியிடங்கள் நிரப்பப்படும்
தற்போது தமிழக அரசு மிகப்பெரிய நிதிச் சுமையில் உள்ளது, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாக தெரிகிறது, இருந்தபோதிலும் தமிழக அரசு மிகப்பெரிய நிதிச் சுமையில் உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
நிதி சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படுவர். இதற்கிடையில் தேவையான இடங்களில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கருத்துரிமை கோரப்பட்டுள்ளது, தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும்’ என நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.