விஷ்ணு விஷாலின் தந்தை ஈடுபட்ட பணமோசடி வழக்கில், ‘நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன்’ என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.
பண மோசடி வழக்கு
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவரின் தந்தை முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் ஆகியோர் மீது நிலம் வாங்கித் தருவதாகக் கூறி 2.70 கோடி ரூபாய் பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அடையாறு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். புகாரின் மீது நடவடிக்கை இல்லையெனக் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றியது. மேலும், 6 மாத காலத்துக்குள் வழக்கை முடிக்க உத்தரவிட்டது. இவ்வழக்கின் விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நடிகர் சூரி
இந்நிலையில், மதுரையில் உள்ள நடிகர் சூரியின் தனியார் உணவகத்தை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். அதன்பிறகு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழக அரசு கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் ஒரு ஆண்டில் நிறைவேற்றி வருகிறது. எந்த ஒரு பணியை எடுத்தாலும் அதை நிறைவேற்ற முதல்வர் தொடர்ந்து ஆலோசனை செய்கிறார்.
முக்கியமான படம்
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த சூரி, ‘விடுதலை படம் பெரும்பகுதி நிறைவடைந்து விட்டது. படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும். சமீபத்தில் வெளியான படங்கள் பெற்ற அதே வெற்றியை பெற்று மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கும். இந்த படத்திற்காக இயக்குநர் வெற்றிமாறன் மிகவும் மெனக்கெட்டுள்ளார். மேலும், விடுதலை இந்தியாவிலேயே முக்கியமான படமாக இருக்கும்.
நீதிமன்றம் நியாயம் வழங்கும்
அதனைத்தொடர்ந்து நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை மீதான பண மோசடி வழக்கைப் பற்றி சூரியிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், குற்றத்தை நிரூபிக்கத் தான் நீதிமன்றம் உள்ளது. இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம். அவ்வளவு எளிதாக யாரும் தப்பிக்க முடியாது. இறைவன் இருக்கிறான். இறைவனுக்கு இணையாக நீதிமன்றத்தை நினைக்கிறேன். நீதிமன்றம் நியாயம் வழங்கும் என நம்புகிறேன்’ என்று நடிகர் சூரி கூறியுள்ளார்.