ரஷ்ய படையிடமிருந்து தங்கள் உயிரை பாதுகாத்துக்கொள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட உக்ரைனின் மரியபோல் நகர மக்கள் அங்குள்ள தியேட்டர் ஒன்றில் தஞ்ச மடைந்திருந்தனர். நாளுக்கு நாள் தாக்குதலை தீவரப்படுத்திக் கொண்டே வரும் ரஷ்யா அந்த தியேட்டரை குண்டு வீசி தகர்த்துள்ளது.
இதில் எத்தனை பொதுமக்கள் இறந்தார்கள் ? அவர்களின் நிலைமை என்ன? எதுவும் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ரஷ்யாவின் பொதுமக்கள் மீதான இந்த தாக்குதல் உக்ரைன் மக்களிடம் பதட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது.
கடந்த பிப்.24 அன்று உக்ரைன் மீது வெளிப்படையாக போரைத்தொடங்கிய ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் உக்ரைனின் பல நகரங்கள் தகர்க்கப்பட்டன. சில முக்கிய நகரங்கள் ரஷ்சியாவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அந்த வகையில், உக்ரைனின் மரியபோல் நகரை சுற்றி வளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.
மரியபோல் நகரம்
3 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைனிய மக்கள் மரியபோல் நகரைவிட்டு வெளியேற முடியாமல் சிக்கி தவிக்கின்றனர். குடிக்க தண்ணீர், உண்ண உணவு என எதுவுமற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மின்சார வசதியும் துண்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நொடியும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு அபாயகரமான நிலையில் அங்கு மக்கள் இருந்து வருகின்றனர். 2400 க்கும் மேற்பட்ட மக்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. உலக நாடுகளின் எந்த நடவடிக்கைக்கும் அடங்காத ரஷ்யாவிடம் சிக்கிஇருக்கும் மரியபோல் நகர மக்களின் நிலை என்னவாகும் என்று சந்தேகம் எழுந்துள்ளது.
தியேட்டரின் நிலை என்ன
மரியபோல் நகரில் இருக்கும் தியேட்டர் மீது ரஷ்யா குண்டு வீசியுள்ளது. 1000 பேருக்கு அதிகமானோர் அங்கு தங்கி இருந்தனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள், பெண்கள், வயதானவர்களா இருந்துள்ளனர். இங்கு குழந்தைகள் அதிகம் இருக்கிறார்கள் என்பதை ரஷ்ய படைகளுக்கு சொல்ல நினைத்த அங்கிருந்த மக்கள் ‘ இங்கு குழந்தைகள் அதிகமாக இருக்கின்றனர்’ என தியேட்டர் முன்புள்ள பலகையில் எழுதி வைத்துள்ளனர். ரஷ்ய படைகளுக்கு புரியவேண்டும் என்பதற்காக ரஷ்ய மொழியிலேயே அதை எழுதியுள்ளனர். எதையும் பொருட்படுத்தாமல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது உக்ரைன் மக்களிடம் அதிர்ச்சியையும் பயத்தையும் அதிகப்படுத்தி உள்ளது.
மரியுபோல் தியேட்டர் தாக்குதலுக்கு முன்பும் தாக்குதலுக்கு பின்பும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் வெளியாகியுள்ளது. தாக்குதல் நடந்த வீடியோவும் வெளியாகியுள்ளது. உக்ரைனின் செர்னிங் நகரிலும் சாப்பாடு வாங்க வெளியே வந்த பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. தாக்குதலில் 10 க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என கூறப்படுகிறது.