நேட்டோ அமைப்போடு உக்ரைன் இணைய முயற்சிப்பதை பல வருடமாக கண்டித்து வந்த ரஷ்யா கடந்த பிப்.24 ம் தேதி வெளிப்படையாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது. உக்ரைனின் முக்கிய நகரங்களையும் ராணுவ தளங்களையும் குறிவைத்து தாக்கிய ரஷ்ய படைகள் நாளுக்கு நாள் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்திக்கொண்டே வந்தது.
போரின் காரணமாக உக்ரைன் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆயிரம் மக்கள் உக்ரைனில் இருந்து அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். பல லட்சம் மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. போர் தொடங்கிய சில நாட்களிலேயே அமைதி பேச்சுவார்த்தை தொடங்கிய நிலையில், இன்னும் எவ்வித முழுமையான உடன்பாடும் ஏற்படாமல் இருந்து வருகிறது.
கடந்த வாரம் துருக்கியில் இரு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு இடையே நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பல்வேறு விவகாரங்களில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து உக்ரைனில் இருக்கும் ராணுவத்தை ரஷ்யா குறைத்துக் கொண்டுள்ளது. இருந்த போதிலும், போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வரவில்லை. இந்தச் சூழலில் ரஷ்ய வீரர்கள் பல்வேறு போர்க் குற்றங்களைப் புரிந்ததாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.
போர் சமயத்தில் ரஷ்ய ராணுவம் பல்வேறு அத்துமீறல்களில் ஈடுபட்டதாக உக்ரைன் அரசு கூறி வருகிறது. 10 வயதுக்கும் குறைவான சிறுமிகளைக் கூட ரஷ்ய வீரர்கள் பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் பெண்களின் உடல்களில் தீக்காயங்களை ஏற்படுத்தும் வகையிலான நாஜி முத்திரையைக் குத்தியதாகவும் உக்ரைன் எம்பி லெசியா வாசிலென்க் கூறியுள்ளார்.போரைப் பயன்படுத்திப் பல ரஷ்ய வீரர்கள் உக்ரைன் மக்களிடம் இருந்து கொள்ளையடித்ததாகவும், பல சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும் விமர்சித்த லெசியா வாசிலென்க், ரஷ்யாவைக் குற்றங்களின் தேசம் என்றும் சாடினார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “ரஷ்ய வீரர்கள் கொள்ளையடித்தனர். பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தனர், கொலை கூடச் செய்தனர். 10 வயது சிறுமிக்குக் கூட மலக்குடல் பகுதிகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.
சில சிறுமிகளுக்கு ஸ்வஸ்திகா முத்திரை போன்ற வடிவில் தீக்காயங்களும் உள்ளன. ரஷ்ய ராணுவம் தான் இதைச் செய்துள்ளது” என்று பதிவிட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை.
பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சில சிறுமிகளின் புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதைக் கண்டு கோபத்தாலும் பயத்தாலும் வெறுப்பாலும் மனம் செயலிழந்துவிட்டதாகவும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா விளக்கம்
இதுபோன்ற குற்றச்சாட்டுகளை ரஷ்ய ராணுவம் முழுமையாக மறுத்துள்ளது. உக்ரைன் ராணுவ தளங்களை மட்டுமே குறி வைத்துத் தாக்கியதாகவும் மக்கள் இருக்கும் பகுதிகளில் எவ்வித தாக்குதலையும் நடத்தவில்லை என்றும் ரஷ்யா விளக்கம் அளித்து வருகிறது.