விளையாட்டு

சிஎஸ்கே-வின் ஹாட்ரிக் தோல்வி.. ஜடேஜாவை நம்பும் தல தோனி!

கடந்த வருட சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இந்த வருட ஐபிஎல் தொடரின் தொடக்கம் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட தோனிக்கு இந்த வருட ஐபிஎல் கடைசி தொடராக இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கேப்டன்சி பொறுப்பில் இருந்து விலகிய தோனிக்கு பதிலாக ஜடேஜா சிஎஸ்கே அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்றார்.

ஜடேஜா கேப்டன்சியோடு புதிய உத்வேகத்துடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி ஹாட்ரிக் தோல்வியை அடைந்துள்ளது. ஐபிஎல் வரலாற்றிலேயே சிஎஸ்கே அணி முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைவது இதுவே முதல்முறை.

சென்னை அணியின் மிகப்பெரிய பலமே ஒரே ப்ளேயிங் 11-க்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து வெற்றி பெறுவது தான். ஆனால், இந்த வருடம் நடைபெற்ற 3 போட்டிகளிலும் சிஎஸ்கே 3 விதமான ப்ளேயிங் 11-ஐ வைத்தும் தோல்வியை தழுவியது. இதற்கு 3 பிரச்சினைகள் தான் முக்கிய காரணம் என்றும் அதை சரிசெய்ய தோனி சில அதிரடியான முடிவுகளை எடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது ருதுராஜ் கெயிக்வாட் படு மோசமாக சொதப்பி வருகிறார். அவரின் ஸ்கோர் இந்த வருட முதல் மூன்று போட்டிகளில் 0, 1, 0 மட்டுமே ஆகும். மற்றொரு ஓப்பனரான உத்தப்பா ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சிறப்பாக ஆடினார். எனவே நல்ல தொடக்கத்தை கொடுக்கும்படி அவர்கள் இருவருக்கும் தனி மீட்டிங் நடத்தி தோனி எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிகிறது.

2வது பிரச்சினை சிறப்பான பவுலிங் இல்லாதது தான். தீபக் சஹார் இன்னும் வரவில்லை. ஆடம் மில்னேவும் காயத்தால் பாதிக்கப்பட்டார். இதனால் முகேஷ் சௌத்ரி, துஷார் தேஷ்பண்டே ஆகியோருக்கு வாய்ப்பு தந்து ரன்கள் பறிபோகிறது. இதனால் கோபத்தில் உள்ள தோனி, தனது கடைசி ஆயுதமான ராஜ்வர்தன் ஹங்கர்கேகரை களமிறக்க திட்டமிட்டுள்ளார்.

அணியின் மிக முக்கிய பிரச்சினை, யார் கேப்டன் என்பது தான். ஆட்டத்தின் முதல் சில ஓவர்களில் ஜடேஜா கேப்டன்சி செய்யும் நிலையில் திடீர் திடீரென தோனி அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார். இதனால் அணி வீரர்களே குழப்பத்தில் யார் சொல்வதை கேட்பது எனத் தெரியாமல் சொதப்புகின்றனர். எனவே இதனை சரி செய்ய, இனி முழு பொறுப்பையும் ஜடேஜாவிடம் தர தோனி முடிவெடுத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

 

Related posts