தமிழக சட்டப்பேரவை நாளை கூட உள்ள நிலையில், 2022 – 23 ஆம் நிதியாண்டிற்கான அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுமென செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கடந்த ஆகஸ்ட் மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அதில், அறிவிக்கப்பட்டிருந்த பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த பட்டுள்ளதுடன், பல திட்டங்களை நிறைவேற்றுவதற்கான அரசாணைகளும் வெளியிடப்பட்டிருக்கின்றன.
இந்த நிலையில், நாளை தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது.கூட்டத்தொடரின் முதல் நாளே தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 2022 – 23 ஆம் நிதியாண்டிற்கான அரசின் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவுள்ளார்.
சட்டப்பேரவை தேர்தல் சமயத்தில் திமுக வழங்கிய வாக்குறுதிகளான மகளிர்க்கு மாதம் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில், நாளை நிதியமைச்சரால் தாக்கல் செய்யப்பட உள்ள நிதிநிலை அறிக்கையில் இடம் பெறக்கூடுமென செய்திகள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
முன்னதாக, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமயத்தில் நாங்கள் வழங்கிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோமென முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

