Editor's Picksதமிழ்நாடு

மிதிவண்டி.. இரவில் ரோந்து ; பெண் ஐபிஎஸ் அதிகாரியை பாராட்டிய முதல்வர்!

சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையராக பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதி. இவர் 2008ஆம் ஆண்டு தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கடந்த ஜனவரி மாதம் சென்னை வடக்கு மண்டல காவல் இணை ஆணையராக நியமிக்கப்பட்ட ரம்யா பாரதி, தனது நேர்த்தியான நடவடிக்கைகளால் முன்னமே அப்பகுதி மக்களால் பாராட்டப்பட்டவர்.

இவர் நேற்று இரவு தனது சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மிதிவண்டியில் சென்று காவல் பணிகளை தந்துள்ளார். மேலும், இரவு நேர காவல் பணிகளில் ஈடுபட்டிருந்த காவலர்களுக்கும் தூங்காமல் விழிப்புடன் இருந்து பணியாற்றுமாறு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் நெட்டிசன்களிடையே பலத்த வரவேற்பு பெற்றிருந்த நிலையில், ஐபிஎஸ் அதிகாரி ரம்யா பாரதி அவர்களைப் பாராட்டியுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின்.

ரம்யா பாரதி அவர்களுக்கு வாழ்த்துகள். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைக் குறைக்கவும் பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் டி.ஜி.பி. அவர்களுக்கு ஆணையிட்டுள்ளேன். தமிழ்நாடு காவல்துறை சட்டம் – ஒழுங்கை நிலைநிறுத்துவதில் இரும்புக்கரம் கொண்டு செயல்படும் எனவும் தெரிவித்துள்ளார் முதல்வர்.

முன்னதாக, கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் பேசுகையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை இந்த அரசு ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. சட்டம் ஒழுங்கை மிகுந்த கவனத்தோடு பேணுகிறோம் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related posts