சினிமா

மன வலியோடுதான் பிரிந்தேன்…செல்வராகவன் உடனான விவாகரத்து குறித்து சோனியா அகர்வால் பேச்சு!

திரையுலக நட்சத்திரங்களின் விவாகரத்து செய்திகள் காதுக்கு புளிப்பு தரக்கூடிய ஒன்றாக மலிவடைந்து வருகிற நிலையில், விவாகரத்து முடிந்து பல ஆண்டுகளுக்கு பிறகு தன்னுடைய விவாகரத்து என்பது இருவருக்கும் மனவலியை தரக்கூடியதாகவே இருந்தது என்று நடிகை சோனியா அகர்வால் மனம் திறந்து பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் ஹீரோக்களுக்கு இணையாக ரசிகர் கூட்டத்தை கொண்ட இயக்குனர்கள் வெகு சிலரே. அவ்வாறு தனது தனித்துவமான இயக்கத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பவர் இயக்குனர் செல்வராகவன்.

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி ஹிட் அடித்த ‘காதல் கொண்டேன்’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் சோனியா அகர்வால். அப்படத்திற்காக அவ்வருட சிறந்த நடிகைக்கான விருதை பெற்ற சோனியா அகர்வால் செல்வராகவனுக்கும் விருப்பமான ஒருவரானார். தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் உருவான ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’ படங்களில் நடித்தார். இணைந்து பணியாற்றிய அனுபவத்தில் இருவருக்குள்ளும் இணக்கமான பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. பின் இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

காரணம் தெரியாத விவாகரத்துகள்

திருமணம் செய்து கொண்ட சில வருடங்களிலேயே செல்வராகவன் சோனியா அகர்வால் ஜோடி பிரிவதாக அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருந்தது. திரைத்துறையில் ஏற்படும் விவாகரத்துகளுக்கு அவரவர் தரப்பில் நிறைய காரணங்கள் சொல்லப்பட்டாலும் அது தன்னை நியாப்படுத்திக்கொள்ள வைக்கப்படும் வாதங்களாகவும், அந்த சூழலை கடக்க முயலும் பேச்சிகளாகவுமே இருக்கும். உண்மையான காரணங்கள் கடைசிவரை வெளிவராத சிதம்பர ரகசியங்களாகவே முடிந்துவிடும். இதுபோன்ற நிகழ்வுகளை இப்போது நடைபெறும் விவாகரத்திலும் நாம் காணமுடிகிறது.

மன வலியுடன் பிரிந்தோம்

 

நீண்ட வருடங்களுக்கு பிறகு தனக்கும் செல்வராகவனுக்கும் இடையேயான விவாகரத்து குறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் சோனியா அகர்வால் மனம்திறந்து பேசியுள்ளார். அதில் ‘காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை என செல்வராகவனுடன் இணைந்து தொடர்ந்து படங்களில் நடித்தேன் அப்பொழுது அவரின் ஹார்டு வொர்க் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இருவரும் காதலிக்க ஆரம்பித்தோம் பின் திருமணம் செய்து கொண்டோம். ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ளும் போது மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதே போல விவாகரத்து செய்யும் போதும் கொஞ்சம் மன வலியுடனேயே இருவரும் பிரிந்தோம்’ என உணர்ச்சிப் பொங்க பழைய நினைவுகளை சோனியா அகர்வால் பகிந்துள்ளார்.