லண்டனிலுள்ள கேம்ரிஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சென்று இருந்தார். அப்போது, தனது தந்தை ராஜீவ் காந்தி மரணம் பற்றி சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.
மவுனம் காத்த ராகுல் காந்தி
இந்திய வம்சாவளியை சேர்ந்த கல்வியாளர் டாக்டர்.ஸ்ருதி கபிலாவுடன் கலந்துரையாடிய ராகுல் காந்தி தனது தந்தையின் மரணம் குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்துகொண்டார். இந்த உரையாடலில், 1991 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் பிரச்சாரத்தின் போது தற்கொலை படையால் கொல்லப்பட்ட ராஜீவ் காந்தி நினைவு நாள் பற்றி கேட்கப்பட்டது. ராஜீவ் காந்தி பற்றி கேட்டதால் ராகுல் காந்தியால் எதுவும் பேச முடியவில்லை. சற்று நேரம் மவுனமாக இருந்தார் என கூறப்படுகிறது.
மிகப்பெரிய கற்றல் அனுபவம்
கேள்விக்கு பதிலளித்த ராகுல் காந்தி ‘என் வாழ்க்கையின் மிகப்பெரிய கற்றல் பாடம் என் தந்தையின் மரணம். அதைவிட பெரிய அனுபவம் எனக்கு வேறு எதுவும் இல்லை. எனது தந்தை மற்றும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தி படுகொலை எனது வாழ்க்கையில் மிகப்பெரிய கற்றல் அனுபவமாக இருந்தது. வாழ்க்கையில் வேறு எப்படியும் கற்க முடியாத விஷயங்களை இந்த நிகழ்வு கற்றுக்கொடுத்தது.
மிகவும் வேதனையானது
என் தந்தையை கொன்ற அந்த நிகழ்வு எனக்கு பெரும் வலியை ஏற்படுத்தியது. ஒரு மகனாக நான் என் தந்தையை இழந்தேன், இது மிகவும் வேதனையானது. ஆனால் அதே நிகழ்வுதான் நான் ஒருபோதும் கற்றுக்கொள்ள முடியாத பல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தது. எனவே, நீங்கள் கற்றுக்கொள்ள தயாராக இருக்கும் வரை சுற்றி இருப்பவர்கள் தீயவர்களாக இருந்தால் கூட உங்களால் கற்றுக்கொள்ள முடியும்’ என பதிலளித்தார்.
நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம்
தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்த கேள்விகள் கேட்கப்பட்டபோது ‘பிரதமர் நரேந்திர மோடி என்னை தாக்கி பேசும்போது, அவர் மிகவும் கொடூரமானவர் என நினைத்து கொள்ளலாம். இவ்வாறு பார்ப்பது ஒரு விதம். எனினும், அவர் கூறுவதில் இருந்து சில நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம் என்ற கோணத்திலும் பார்க்கலாம்’ என கூறினார்.
கடினமான வேலை
கேம்பிரிஜ் பல்கலைக்கழக மாணவர்கள் இந்திய அரசியல் குறித்து ராகுல் காந்தியிடம் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு ‘இது ஒரு கடினமான வேலை, நீங்கள் அதை முறையாக எவ்வித சமரசமும் இல்லாமல் செய்தால், அது ஒரு கஷ்டமான வேலைதான். ஜாலியான வேலை இல்லை. இதில் நேர்மையும் தீவிரமான ஈடுபடும் அவசியம்’ என ராகுல் காந்தி கூறினார்.