தமிழ்நாடுவிளையாட்டு

ஆன்லைன் ரம்மி விளையாட்டு – இளம்பெண் தற்கொலை !

மணலி அருகே ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆன்லைன் ரம்மி

சென்னை மணலி புதுநகரைச் சேர்ந்தவர்கள் பாக்யராஜ் (32) பவானி (29) தம்பதி. இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். பாக்யராஜ் கந்தன் சாவடியில் உள்ள ஹெல்த்கேர் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இருவரும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டு தங்களது இல்லற வாழ்க்கையை நன்றாக வாழ்ந்து வந்திருக்கின்றனர். கடந்த ஓராண்டுக்கு முன்பாக பவானி ஆன்லைன் ரம்மி சூதாட்ட விளையாட்டில் ஈடுபட தொடங்கி, எப்போதும் அதைப்பற்றியே பேசிக்கொண்டு, ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வந்ததாக கூறப்படுகிறது.

பண இழப்பு

பவானி பல வழிகளில் இருந்து பணத்தை திரட்டிய ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செலவழித்துள்ளார். பணத்தை செலவழித்ததோடு மட்டும் இன்றி அதிக பணத்தை இழந்தும் உள்ளார். ஆனாலும், பவானியால் ரம்மி விளையாட்டில் இருந்து விடுபட முடியவில்லை. பவானி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக ஆர்வம் கொண்டிருப்பது நல்லதல்ல என கணவர் பாக்யராஜும், பவானியின் பெற்றோரும் கண்டித்துள்ளனர்.

20 லட்சம்

ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு முழு அடிமையாகிய பவானி, தனது இரு தங்கைகளான பாரதி மற்றும் கவிதா ஆகியோரிடம் இருந்து தலா ஒன்றரை லட்சம், மொத்தம் மூன்று லட்சம் பணத்தை வாங்கியுள்ளார். மொத்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் செலவழித்து பணத்தை இழந்ததால், தன்னிடம் உள்ள 20 சவரன் நகைகளை விற்று பணமாக்கி அந்த பணத்தையும் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக செலவழித்திருக்கிறார்.

Depression

20 லட்சத்துக்கும் மேல் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்த பவானி மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது தங்கை பாரதியை தொடர்பு கொண்டு வருத்தப்பட்டிருக்கிறார். தங்கை பாரதி, இனி இந்த விளையாட்டில் ஈடுபட வேண்டாம் என பவானிக்கு அறிவுரையும் கூறியுள்ளார்.

தூக்கிட்டு தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் லட்ச கணக்கில் பணத்தை இழந்ததால் பவானியால் மன உளைச்சலிலிருந்து விடுபட முடியவில்லை. இதனிடையே இரு குழந்தைகள் மற்றும் கணவருடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்த பவானி நேற்று இரவு 8.30 மணி அளவில் குளித்துவிட்டு வருவதாக அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரம் ஆகியும் பவானி அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த கணவர் பாக்யராஜ் கதவை உடைத்து பார்த்தபோது பவானி தூக்கிட்டபடி அறையில் தொங்கிகொண்டு இருந்திருக்கிறார். பாக்யராஜ் உடனே மனைவியை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

பவானியை பரிசோதனை செய்த மருத்துவர் பவானி இறந்துவிட்டதாக கூறியிருக்கிறார். இதனால், அதிர்ச்சியடைந்த பவானியின் கணவர் பாக்யராஜ் மற்றும் பவானியின் உறவினர்கள் கதறி அழுதனர்.

இதுவரை ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஆண்கள் பலர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் பெண் ஒருவரும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மிகுந்த பரப்பை கிளப்பியுள்ளது. தமிழக அரசு உடனடியாக ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts