திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்பும் வந்துவிடுகிறது. தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ‘செவிடன் காதில் சங்கு ஊதியது போல இருக்கிறது’ என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டம், எடப்பாடியில் உள்ள பயணியர் மாளிகையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டம் முடிந்த பின்பு எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ‘சமீபத்தில் சேலம் வந்த முதலமைச்சர் ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் எந்த திட்டங்களும் செய்யப்படவில்லை. சேலம் மாவட்டத்தில் எடப்பாடி, மேட்டூர், ஓமலூர், சங்ககிரி ஆகிய 4 தொகுதிகளில் உள்ள 100 ஏரிகளுக்கு மேல் நிரம்பும்படியான மேட்டூர் உபரிநீர் திட்டத்தை, அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து, அதில் ஒரு பகுதி வேலைப்பாடுகள் முடிக்கப்பட்டு விட்டது. ஆனால் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்பு இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டனர்’ என குற்றஞ்சாட்டினார்.
பல திட்டங்கள்
மேலும், ‘எனது தலைமையிலான ஆட்சியில் பின்தங்கிய எடப்பாடி தொகுதிக்குள் மட்டும் பாலிடெக்னிக் கல்லூரி, பி.எட் கல்லூரி கட்டிக்கொடுத்தோம். நடுநிலை பள்ளிகள் உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டது. கால்நடை மருத்துவமனைகள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் கட்டிக்கொடுத்தோம். எடப்பாடி நகரத்தில் 30 வார்டுகளிலும் கூட்டு குடிநீர், நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்தோம். வணிகவளாகம், பாலங்கள், பூங்கா, நியாயவிலை கடைகள், எடப்பாடி, நங்கவள்ளி ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சிட்கோ தொழிற்பேட்டை, தீயணைப்பு நிலையங்கள், தரமான சாலை வசதிகள், கூடுதலாக பேருந்துகள் என அனைத்து வசதிகளும் செய்து கொடுத்தோம். வேண்டுமென்றே என் மீது தவறான, பொய்யான தகவலை ஸ்டாலின் கூறியது கண்டிக்கத்தக்கது’ என்றார்.
நில அபகரிப்பு
‘திமுக ஆட்சிக்கு வந்தாலே நில அபகரிப்பும் வந்துவிடுகிறது. அது அவர்களின் தொழிலாக உள்ளது எனவும் ஏழை எளிய மக்களிடம் இருந்து திமுகவினர் நிலங்களை மிரட்டி அபகரித்து வருவது கண்டிக்கதக்கது. தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை தங்குதடையில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் சிறுமிகள், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து உள்ளன. இதனை தமிழக அரசு கட்டுப்படுத்த முடியாத கையாலாகாத நிலையில் உள்ளது. எந்த திட்டங்களையும் திமுகவால் செய்யமுடியவில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்பதால்தான் அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திசை திருப்புகின்றனர்’ என தெரிவித்தார்.
மக்கள் ஏமாற்றம்
‘திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நம்பி நகை கடன், பயிர் கடன், கல்வி கடன் வாங்கிய அனைவரும் ஏமாற்றப்பட்டுள்ளனர். தொடர்ந்து விவசாய உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரித்து வருகின்றது. டீசல் மற்றும் பெட்ரோல் விலையை குறைப்போம் என சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்றனர். அரசு ஊழியருக்கு பழைய ஓய்வு ஊதிய திட்டம், அகவிலைப்படிகூட கொடுக்க முடியவில்லை. கடந்த ஓராண்டில் எல்லா திட்டங்கள் செய்யப்பட்டதாக வெற்று விளம்பரங்கள் தான் செய்து வருகின்றனர்.
மின்வெட்டு
திமுக தேர்தல் வாக்குறுதியான நீட் தேர்வு ரத்து என்ன ஆனது ?’ என திமுகவை பார்த்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். ‘அதிமுக ஆட்சியில் நாங்கள் செய்ததைத்தான் திமுகவும் செய்து வருகிறது. திமுக ஆட்சியில் அதிகமான மின்வெட்டு நிலவுவதால் பொதுமக்கள் மற்றும் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கே தமிழகம் தான் முதன்மை மாநிலம் என்று ஸ்டாலின் கூறினார். கடந்த ஓராண்டில் தமிழகம் ஊழலில்தான் முதன்மையாக உள்ளது.
ஆன்லைன் ரம்மி தடை
ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட வேண்டாம் என டிஜிபி கூறிவருகிறார். இந்த விளையாட்டில் முதலில் பணம் வரும், பின்னர் தற்கொலை செய்யகொள்ள ஏற்படும் சூழல் உருவாகும் என கூறுகிறார். ஆனால் தமிழக அரசு இந்த விசயத்தில் செவிடன் காதில் சங்கு ஊதியது போல இருக்கிறது’ என அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.