மயிலாடுதுறையில் பெண் ஒருவர் மீன் சுத்தம் செய்யும் கூலி வேலை செய்து தனது மகளை ரஷ்யாவில் படிக்க வைத்து டாக்டராக்கி இருக்கின்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கூலி வேலை
மயிலாடுதுறை புறநகர் பகுதியை சேர்ந்தவர் ரமணி. ரமணிக்கு ரவிசந்திரன் என்ற மகனும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர். ரமணியின் கணவர் 24 வருடங்களுக்கு முன்பே உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.
உறவினர்கள் கைவிட்ட நிலையில் இரண்டு பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு வாழ்வாதாரத்துக்காக மயிலாடுதுறை மீன் மார்க்கெட்டில் மீன்களை சுத்தம் செய்து கொடுக்கும் கூலி வேலை செய்து வந்திருக்கிறார் ரமணி. இந்த கூலி வேலையில் ரூ.20 முதல் ரூ.50 வரை சம்பளம் கிடைத்துள்ளது.
மூத்த மகன்
மீன் சுத்தம் செய்வதால் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நடத்தி வந்திருக்கிறார். இந்நிலையில், மூத்த மகன் உடல்நலக்குறைவால் பாதிக்க பட்டிருக்கிறார். ரத்த நாள சுரப்பி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மூத்த மகன் ரவிசந்திரன் பத்தாம் வகுப்போடு பள்ளிப்படிப்பை முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. தற்போது ரவிச்சந்திரன் வீட்டிலேயே இருக்கிறார். ரவிச்சந்திரனின் மருந்து மாத்திரைக்கு பல்லாயிரம் ரூபாய் ஆகுமாம்.
மகளின் மருத்துவ கனவு
ரமணியின் மகள் விஜயலட்சுமி 12ம் வகுப்பை முடித்து மருத்துவம் படிக்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், குடும்ப சூழல் காரணமாக மெக்கானிக்கல் என்ஜினீரிங் சேர்ந்துள்ளார். நன்றாக படிக்கும் தனது மகளின் கனவை நினைவாக்க வேண்டும் என நினைத்த தாய் ரமணி தனது சொந்த வீடு மற்றும் வைத்திருந்த நகை என எல்லாவற்றையும் விற்று விஜயலட்சுமியை மருத்துவம் படிப்பதற்காக ரஷ்யா அனுப்பி வைத்திருக்கிறார்.
அங்கீகார தேர்வு
தன்னம்பிக்கையான தாயின் உழைப்பால் ரஷ்யாவுக்கு சென்று மருத்துவம் படித்து விஜயலட்சுமி தற்போது இந்தியா திரும்பியுள்ளார். இந்தியாவில் மருத்துவராக பணியாற்ற அங்கீகார தேர்வு எழுத வேண்டும் என்பதற்காக விஜயலட்சுமி தயாராகி வருகிறார். ரமணி இன்றளவும் மீன்களை சுத்தம் செய்யும் கூலி வேலையே செய்து தனது மகளின் படிப்பிற்கும் மகனின் மருத்துவ செலவையும், குடும்பத்தின் அன்றாட செலவுகளையும் எதிர்கொண்டு வருகிறார்.
முதல்வர் பாராட்டு
ரமணி இவரது மகள் விஜயலட்சுமி மற்றும் மகன் ரவிசந்திரன் இவர்களுடன் சேர்ந்து மயிலாடுதுறை கலெக்டர் லலிதா ஆகியோர் சென்று, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர். அப்போது முதல்வர், டாக்டர் விஜயலட்சுமி மற்றும் கூலி வேலை செய்து மகளை ரஷ்யா வரை சென்று படிக்க வைத்த தாய் ரமணி ஆகியோருக்கு முதல்வர் பாராட்டு தெரிவித்தார்.
கூலி வேலை செய்து மகளை மருத்துவராக்கிய ரமணி ரத்த நாள சுரப்பி குறைபாடால் பாதிக்கப்பட்டிருக்கிற தனது மகனின் மருத்துவ செலவுக்கு மட்டும் தமிழ்நாடு அரசு உதவி வழங்க வேண்டும் என முதல்வரிடம் ரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.