நண்பர் விஜயகாந்த் அவர்கள் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என நடிகர் ரஜினி தனது ட்விட்டர் பதிவிட்டுள்ளார்.
நடிகர் விஜயகாந்த்
தமிழ் சினிமாவின் முன்னணி ஆக்ஷன் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜயகாந்த். மதுரையை பூர்வீகமாக கொண்ட இவர் சினிமா மீது கொண்ட காதலால் இளம் வயதிலேயே சென்னைக்கு சினிமா வாய்ப்பு தேடி வந்துவிட்டார். சண்டைக்காட்சிகளில் வில்லன்களை பந்தாடும் காட்சிகள் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கினார். அதிலும் போலீஸ் கதாப்பாத்திரம் என்றால் கச்சிதமாக பொருந்தக்கூடியவர் விஜயகாந்த். ரசிகர்களால் கேப்டன், புரட்சிக் கலைஞர் என்று அழைக்கப்பட்டு வருகிறார். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர் சங்கத் தலைவர் என்று சினிமாவில் கலக்கிக் கொண்டிருந்தார்.
அரசியல்வாதி விஜயகாந்த்
அரசியலில் கால் வைத்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் விஜயகாந்த். அரசியலில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல்நல குறைவால் ஓய்வில் உள்ளார். கட்சியின் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் மட்டுமே பங்கேற்றாலும் எதுவும் பேசாமல் அமர்ந்தே இருப்பார்.
உடல்நல குறைவால்
இந்நிலையில், சமீபத்தில் உடல்நல குறைவால் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. இதனால் மருத்துவர்கள் அவரது வலது காலில் இருந்து 3 விரல்களை அறுவை சிகிச்சை மூலம் அகற்றியுள்ளனர்.
தேதிமுக அறிக்கை
மருத்துவர்கள் கண்காணிப்பில் தற்போது அவர் நலமுடன் இருக்கிறார். மேலும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சை முடிந்து ஒரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் என தேதிமுக சார்பாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்
இந்நிலையில், விஜயகாந்த் நலம் பெற்று விரைவில் வீடு திரும்பவேண்டும் என அரசியல் பிரபலங்களும் நடிகர்களும், தேமுதிக தொண்டர்களும் வேண்டி வருகின்றனர்.
என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
— Rajinikanth (@rajinikanth) June 21, 2022
அந்த வகையில், நடிகர் ரஜினிகாந்த், ‘என் அருமை நண்பர் விஜயகாந்த் அவர்கள் விரைவில் குணமடைந்து பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்’ என்று ட்வீட் செய்துள்ளார்.