ஆன்மீகம்

சென்னை கந்தகோட்டம் முருகன் திருக்கோவில் – ஒரு சிறு பார்வை

குன்று இருக்கும் இடமெல்லாம், குமரன் இருப்பார். ஆனால்  சென்னையில் மிகவும் நெருக்கடி மிகுந்த இடத்தில்  முருகப்பெருமான் அருள் பாலித்து வருகிறார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?.

 

பாரிமுனை ராசப்ப செட்டி தெருவில் கந்தக்கோட்டம் என்று அழைக்கப்படும் கந்தசுவாமி கோயில்தான் முருகன் விரும்பி இருந்த இடம்.

கந்தசுவாமி கோயில் சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பகுதியில் வசித்த சிவாச்சாரியார் திருப்போரூர் தலத்திற்கு சென்றுவிட்டு சில ஆச்சார்யார்களுடன் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் பலத்த மழைபெய்தது. வெள்ளம் பெருக்கெடுத்ததால் அவர்களால் ஊருக்கு திரும்ப முடியவில்லை.

எனவே, வழியில் ஓர் மடத்தில் தங்கினர். அன்றிரவு சிவாச்சாரியாரின் கனவில் காட்சி தந்தார் முருகன்.  தான் அருகிலுள்ள புற்றில் குடிகொண்டிருப்பதாகவும், தனக்கு கோயில் கட்டும்படியும் கூறினாராம். கண்விழித்த சிவாச்சாரியார் அங்கிருந்த புற்றில் முருகன், சிலை வடிவில் இருந்ததைக் கண்டார். அந்த சிலையை எடுத்துக் கொண்டு, ஊருக்கு புறப்பட்டார்.

வழியில் ஓரிடத்தில் சிலையை வைத்துவிட்டு சிறிதுநேரம் ஓய்வெடுத்தனர். பின் சிலையை எடுக்க முயன்றபோது முடியவில்லை. எனவே, அந்த இடத்திலேயே முருகனுக்கு கோயில் கட்டப்பட்டது. சுவாமி இந்த இடத்தில் தானாக விரும்பி நின்றவர். எனவே தான் பீடம் இல்லாமல் தரையில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார் என்கிறார்கள்.

கோயிலில் மூலவருக்கு நேரே வாயில் கிடையாது. மூலவருக்கும், கொடிமரத்திற்கும் இடையில் கூடிய கல் ஜன்னல் இருக்கிறது. வடக்குப்பகுதியில் 5 நிலைகள் கொண்ட ராஜ கோபுரம் இருக்கிறது.

8 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த கோயிலில் சரவண பொய்கை என்ற பெயரில் ஒரு அழகிய குளம் இருக்கிறது.

குளக்கரையில் விநாயகர் சித்தி, புத்தியுடன் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். காசி விஸ்வநாதர், அம்பாள் விசாலாட்சி சன்னதியும் உள்ளது.

‘தருமமிகு சென்னையில் கந்த கோட்டத்துள் வளர் தலமோங்கு கந்தவேளே’ என்று கந்த கோட்டத்து முருகனை புகழ்ந்து வள்ளலார் பாமாலை சூட்டியுள்ளார்.

வள்ளலாரைப் போன்றே சிதம்பரசாமி, பாம்பன் குமரகுருபரதாச சுவாமிகள், தண்டபாணி சுவாமிகள் போன்றோரும் இங்கு வந்து பாடியுள்ளனர்.

பல்வேறு பிரச்சனைகளில் தீர்வுகாண பக்தர்கள் முருகனை வந்து வணங்கி அருள் பெற்று செல்கிறார்கள். தங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் போது நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

தோல் நோய் மற்றும் கட்டிகளால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த சரவணப்பொய்கையில் வெல்லம் கரைக்கின்றனர்.

குளத்தீர்த்தத்தை நம் மீது தெளித்துக்கொண்டு ஒரே சமயத்தில் குளக்கரையில் லட்சுமி, சரஸ்வதியுடன் உள்ள விநாயகரை வணங்கினால் கல்வி சிறக்கும், செல்வம் பெருகும், ஞானம் கிடைக்கும் என்கின்றனர்.

Related posts