புனித ரமலான் தினத்தை கொண்டாட்டத்தின் போது, காவல் நிலையத்திற்கு முன் முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். கன்னியாகுமரியில் இந்த சம்பவம் மிகபெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களேபுரத்திம்-ஜமாத்
கன்னியாகுமரியில் மாவட்டம், களேபுரத்தில் மிக முக்கியமான முஸ்லீம் ஜமாத் ஒன்றுள்ளது. இதில் முஸ்லிம்களுக்குள் ஜமாத்தை யார் நிர்வகிப்பது என இரு தரப்பு இடையே பல காலமாக பிரச்சனை இருந்து வந்தது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு வக்பு வாரியம் அறிவுறுத்தலின்படி இருதரப்பு மக்களும் ஜமாத்தை நிர்வாகம் செய்து வந்தனர்.
இருதரப்பு பேச்சுவார்த்தை
இதில் நேற்று (02.05.2022) ஒரு தரப்பினர் ரமலான் பண்டிகை முன்னிட்டு தொழுகை நடத்தினர். மற்றொரு தரப்பினர் (03.05.2022) அன்று தொழுகை நடத்துவதாக இருந்தது. இதனால் காவல் துறையினர் இரு தரப்பையும் நேற்று கன்னியாகுமரி காவல் நிலையத்திற்கு பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர்.
கைகலப்பு
அப்போது காவல் நிலைத்திற்கு வெளியே இருந்த இரு தரப்பு ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒருக்கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டனர். இதனை சற்றும் எதிர்பார்க்காத காவல்துறையினர் இரு தரப்பு மக்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பிவைத்தனர். இதனால் காவல்நிலையத்திற்கு முன்பாக சில மணி நேரம் பதற்றம் நிலவியது.
சாலைமறியல்
இச்சம்பவத்தை அறிந்த ஒரு தரப்பு ஆதரவாளர்கள் நாகர்கோவில் செல்லும் சாலையில், சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த கன்னியாகுமரி காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ராஜா அங்கு விரைந்தார். மறியலில் ஈடுபட்ட ஆதரவாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தையால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனைதொடர்ந்து அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருவதால் ஏராளமான போலீசார் குவிக்கபட்டுள்ளனர்.