கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் பிரச்சனை இஸ்லாமியர்கள் மத்தியில் பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இப்போது கர்நாடகாவில் உகாதி கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் இஸ்லாமியர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இஸ்லாமிய மாணவிகள் பள்ளிகளுக்கு ஹிஜாப் அணிந்து வருவதை தடைசெய்ய கர்நாடக கல்வி நிறுவனங்கள் ஒருமனதாக செயல்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் ஹலால் கறி விவகாரம் பெரிய பேசுபொருளாக மாறியது. இந்துக்கள் ஹலால் கறியைப் புறக்கணிக்க வேண்டும் என்று அங்குள்ள சில வலதுசாரி அமைப்புகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதுபோன்ற இஸ்லாமியர்களுக்கு எதிரான சர்ச்சைகள் கர்நாடகாவில் தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், கர்நாடகாவில் மற்றொரு மதவாத சம்பவமாக, யாரடோனா கிராமத்தில் உகாதி கொண்டாட்டத்தின் போது இரு தரப்பிற்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் திடீரென இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான மோதலாக மாறியது. அங்குள்ள மசூதிக்கு அருகே ஸ்பீக்கரில் பாடல்கள் ஒலிபரப்பிய விவகாரத்தில் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஜாமியா மஸ்ஜித் அருகே நடைபெற்ற இந்த மோதலில் இரு தரப்பினரும் ஒருவருக்கு ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பரபரப்பைக் கிளப்பி உள்ளது.
இந்த மோதலில் முஸ்லிம்கள் காயமடைந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், மசூதி தாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக யாரும் புகார் அளிக்கவில்லை என்றாலும், ராய்ச்சூர் போலீசார் 40 க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மாவட்ட எஸ்.பி நேரடியாக அப்பகுதி மக்களைச் சந்தித்த போதிலும், யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. இந்தச் சம்பவம் தொடர்பாக சிஆர்பிசி பிரிவுகள் 107 மற்றும் 151 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சிலரைக் கைது செய்து விசாரணை செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக கடந்த வாரம் கர்நாடகாவின் ஹொசமானே பகுதியில் ஹலால் இறைச்சிக்கு எதிராக பஜ்ரங் தள் உறுப்பினர்கள் சிலர் பிரசாரம் செய்து வந்துள்ளனர். அப்போது அங்கிருந்து முஸ்லிம் இறைச்சி வியாபாரி தௌசிப் என்பவரிடம் ஹலால் செய்யப்படாத இறைச்சியை விற்குமாறு வலியுறுத்தி உள்ளனர். அத்தகைய இறைச்சி தயாராக இல்லை என்றும், அதை ஏற்பாடு செய்வதாகவும் இறைச்சி வியாபாரி தௌசிப் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் தௌசிப்பை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.