மகளுக்கு சப்போட்டா பழத்தில் விஷம் வைத்து கொடுத்து தந்தை கொலை செய்த சம்பவம், தெலங்கானா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம், யாதாத்ரி மாவட்டம், சான்ஸ்தான் நாராயணபுரம் மண்டலத்திற்கு உட்பட்ட லச்சம்மா குடெம் (Lachamma gudem) பகுதியில் வசித்து வருபவர் ரவி வரிக்குப்பலா (Ravi Varikuppala). இவர் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுவாதி என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதிக்கு மேகனா (வயது 2) மற்றும் ஒன்பது மாத மயூரி என்ற குழந்தைகள் உள்ளன.
குடும்ப சண்டைக் காரணமாக சுவாதி தனது கைக் குழந்தையுடன் தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். 2 வயது பெண் குழந்தை மேகனாவுடன் ரவி வரிக்குப்பலா தனியாக வசித்து வந்தார். இருப்பினும், தனது மூத்த மகளை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் உதவிக் கேட்டுள்ளார். எனினும் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. இதையடுத்து, மட்குலப்பள்ளி காவல் நிலையத்தில் சுவாதி புகார் அளித்துள்ளார். மட்குலப்பள்ளி போலீசார் அந்த புகாரை நாராயண்புரம் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அதன் பேரில், ரவி வரிக்குப்பலாவை நேரில் அழைத்து போலீசார் பேசினர். பெரியவர்கள் முன்னிலையில் திங்கட்கிழமை அன்று சமரச பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, சனிக்கிழமை அன்று தனது மகள் மேகனாவை கொலை செய்ய முடிவு செய்த ரவி, சப்போட்டா பழத்தில் எலி மருந்தை கலந்து கொடுத்துள்ளார். அதனை சாப்பிட்ட சிறுமி மேகனா வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். இதையடுத்து, ரவி வரிக்குப்பல்லாவும் உயிரை மாய்க்க முயன்றார்.
இதையடுத்து குடும்பத்தினர் மேகனாவை நல்கொண்டா மருத்துவமனைக்கும், நிலோஃபர் மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி சிறுமி மேகனா உயிரிழந்தார். இது குறித்து தாய் சுவாதி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ரவியிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், “எனக்கு என் மனைவியும், குழந்தைகளும் வேண்டும். என் குழந்தையை என்னிடம் இருந்து பிரித்து விடுவார்கள் என அஞ்சினேன். அதனால் தான் அவ்வாறு செய்தேன்” என்று கூறியுள்ளார். தற்போது ரவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

