இந்தியாசமூகம்

ஹிஜாப் அணிந்து தேர்வெழுத தொடரும் தடை.. முதல்வரிடம் ட்விட்டரில் அனுமதி கேட்க்கும் ஆலியா ஆஸாதி!

கர்நாடகா மாநிலத்தில் ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவிகளை கல்வி நிர்வாகங்கள் உள்ளே அனுமதிக்க மறுத்த சம்பவம் சில மாதங்களுக்கு முன்பு நடந்தது.

இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முஸ்லிம் மாணவிகளுக்கு எதிராக இந்து மாணவர்களும் காவி துண்டு அணிந்து பள்ளி கல்லூரிகளுக்கு வர முயன்றனர். அவர்களையும் நிர்வாகம் உள்ளே அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தியது.

முஸ்லிம் மாணவிகள் பள்ளி கல்லூரிகளில் ஹிஜாப் அணிவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய கர்நாடக அரசு பிறப்பித்த தடை செல்லும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவிகளில் ஒருவரான ஆலியா ஆஸாதி “நாட்டின் எதிர்காலம் நாங்கள் என்பதை உணர்ந்து, ஹிஜாப் அணிந்து தேர்வெழுத எங்களை அனுமதிப்பது குறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை பரிசீலிக்க வேண்டும்” என தனது ட்விட்டர் பக்கத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மையை குறிப்பிட்டு ஒரு ட்வீட் செய்துள்ளார்.

கடந்த 28-ம் தேதி தொடங்கிய எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பங்கேற்க கர்நாடக அரசு தடை விதித்தது. இதனால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் தேர்வை புறக்கணித்தனர். இந்நிலையில் வரும் ஏப்.22-ம் தேதி முதல் “2nd PU”எனப்படும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கவுள்ளது.

இந்நிலையில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மாணவிகளில் ஒருவரான ஆலியா ஆஸாதி, தனது ட்விட்டர் பக்கத்தில் “வரும் ஏப்.22-ம் தேதி முதல் பனிரெண்டாம் வகுப்புத் தோர்வுகள் தொடங்கவுள்ளன. எங்கள் எதிர்காலம் பாழாகாமல் தடுத்து நிறுத்துவதற்கு கர்நாடக முதல்வருக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. நாங்கள் ஹிஜாப் அணிந்து தேர்வெழுத அனுமதி வழங்க உத்தரவிடலாம். எனவே இந்த நாட்டின் எதிர்காலம் நாங்கள் என்பதை உணர்ந்து, எங்களது கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும்” என ஆலியா ஆஸாதி பதிவிட்டுள்ளார்.

ஹிஜாப் போராட்டத்தின் காரணமாக ஏராளமான மாணவிகள் தேர்வை புறக்கணிக்கும் நிலையில், இவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படமாட்டாது என்று கர்நாடக அமைச்சர் பி.சி.நாகேஷ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts