அரசியல்சமூகம்தமிழ்நாடு

ஆளுநரின் தேநீர் விருந்து – புறக்கணிப்பு செய்யும் தமிழக அரசு!

நீட் விலக்கு மசோதாவிற்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் காலதாமதம் செய்வதால், ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை தமிழக அரசு புறக்கணிப்பதாக  அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு விலக்கு மாசோதா கடந்த ஆண்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதவை மீண்டும் தமிழக அரசிற்கே திருப்பி அனுப்பி வைத்தார் ஆளுநர். இதனைத் தொடர்ந்து தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி ஆலோசனை நடத்தியது. கூட்டத்தின் முடிவில் மீண்டும் சட்டப்பேரவைக் கூட்டத்தைக் கூட்டி நீட் தேர்விற்கு எதிராக மசோதா நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி கூட்டப்பட்ட சிறப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தில் நீட் விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த மசோதா மீது ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச் 15 ஆம் தேதி ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார். அப்போது நீட் தேர்வு மசோதா மீது விரைவாக நடவடிக்கை எடுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இச்சந்திப்புக்கு பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்களிக்கக் கோரும் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதாக ஆளுநர் உறுதி அளித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு ஒரு மாதம் ஆகியும் ஆளுநர் இந்த மசோதா மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழக மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று காலை ஆளுநரை நேரில் சந்தித்து நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இது தொடர்பாக ஆளுநர் எந்த வித பதிலும் அளிக்காத காரணத்தால், இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற உள்ள தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆளுநர் மாளிகை முன்பு அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், ” நீட் மசோதவிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் தமிழக சட்டப்பேரவையின் மாண்பு கேள்விக்குறியாகியுள்ளது. மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க எந்தவித கால வரம்பையும் ஆளுநர் தெரிவிக்கவில்லை. மருத்துவ மாணவர் சேர்க்கை விரைவில் தொடங்க உள்ளது. அதற்கு முன்பாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற வேண்டும்.

முதல்வரிடம் ஒப்புதல் அளித்தபடி, ஆளுநர் இந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். சட்டப்பேரவையின் மாண்பு, ஏழை எளிய மக்களின் உணர்வு

கிராமப்புற மாணவர்களின் கனவு இவற்றை பிரதிபலிக்கும் இந்த மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் உள்ளது வருத்தத்தைத் தருகிறது. எனவே, ஆளுநர் மாளிகையில் இன்று மாலை நடக்க உள்ள நிகழ்ச்சிகளில் தமிழக அரசு கலந்து கொள்ள இயலாது” என்று அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.

Related posts