Editor's Picksதமிழ்நாடு

சாதி – மத மோதல்களை உருவாக்கும் பதிவுகளை இடுவோர் மீது கடும் நடவடிக்கை!

அரசியல் உள்நோக்கத்துடன் சமூக வலைத்தளங்களில் சாதி – மத மோதல்களை உருவாக்கும் வகையில் பதிவுகளை இடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென எச்சரித்துள்ளார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் மாவட்டக் காவல்துறை, வனத்துறை அதிகாரிகள் மாநாடு சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநாட்டின் இறுதிநாளான இன்று அதில் கலந்துகொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்.

அப்போது அவர் பேசுகையில், சாதி, மத மோதல்களை தூண்டும் வகையில், சமூக வலைதளங்களில் சிலர் திட்டமிட்டு பதிவிடுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், சாதி மோதல்களை சட்டம், ஒழுங்கு பிரச்னையாக மட்டும் பார்க்காதீர்கள். அது சமூக ஒழுங்குப் பிரச்னை. இதில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.

மேலும், சமூக வலைதளங்கள் மூலமாக நடக்கும் வன்மங்களுக்கு எந்தெந்த வகையில் முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டத்தை காவல்துறை அதிகாரிகள் நடத்தி அறிக்கை தாக்கல் செய்யக் கேட்டுக் கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

Related posts