அரசியல்இந்தியா

14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை; முதல்வர் மம்தா பானர்ஜி கருத்தால் சர்ச்சை!

மேற்கு வங்க மாநிலத்தில், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜி மீது புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், முதல்வர் பதவியில் நீடிக்க மம்தா பானர்ஜி தகுதியில்லாதவர் என பாதிக்கப்பட்டப் பெண்ணின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் தனது மகனின் பிறந்தநாளை முன்னிட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் கலந்துக்கொண்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் பின்னர் அவர் இறந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த வன்கொடுமை வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகரான சமர் என்பவரது மகன் சோஹேலை போலீசார் கைது செய்துள்ளனர். சம்பவத்தன்று பிறந்தநாள் விழாவிற்கு சென்ற சிறுமியை அங்கிருந்த சோஹேல் மற்றும் அவரது நண்பர்கள் மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் அவரது வீட்டில் இறக்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து சோஹேல் மற்றும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் குறித்து நேற்று முன்தினம் கருத்து தெரிவித்த மேற்குவங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி ‘ இந்த சம்பவம் பாலியல் வன்கொடுமையா? அல்லது காதல் விவகாரமா? என போலீசாரிடம் நான் கேட்டுள்ளேன். இது மோசமான சம்பவம். கைது நடைபெற்றுள்ளது. ஆனால், சிறுமிக்கும் அந்த இளைஞனுக்கும் இடையே காதல் இருந்துள்ளது என எனக்கு தகவல் கிடைத்துள்ளது’ என்றார்.

அவரின் இந்த கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரைச் சேர்ந்தவர்கள் என்பதால், மம்தா அவர்களை காப்பாற்ற முயல்வதாக எதிர் கட்சியினர் கூறினர். இந்நிலையில் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு பதிலளித்த சிறுமியின் தாய், இதுபோன்ற கருத்துகளை தெரிவித்தால் மம்தா பானர்ஜி முதல்வராக இருக்க தகுதியற்றவர் என்று கூறினார்.

இதுகுறித்து பேசிய சிறுமியின் தாயார் ‘பாதிக்கப்பட்டவரைப் பற்றி இதுபோன்ற கருத்துக்களைக் கூறினால் அவர் முதல்வர் பதவிக்கு தகுதியானவர் அல்ல. ஒரு பெண்ணாக இருந்துக்கொண்டு இதுபோன்ற கருத்துகளை கூறினால், அவர் வகிக்கும் பதவிக்கு அது பொருந்தாது. அவருடைய இந்த கருத்துக்கள் இது போன்ற குற்றங்களை ஊக்குவிக்கிறது. பாதிக்கப்பட்டவர்களை புறக்கணிக்கிறது. இதுபோன்ற அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கிகளுக்காக மட்டுமே கவலைப்படுகிறார்கள்’ என விமர்சித்துள்ளார்.

 

 

 

Related posts