ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்று பணத்தை திரும்ப செலுத்த முடியாத இளைஞரின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பியதால் இளைஞர் தற்கொலை.
ஆன்லைன் செயலி கடன்
கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெறுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. எவ்வித ஆவணங்களும் இன்றி சில நிமிடங்களிலேயே பணம் கிடைத்துவிடுவதால் இந்த வகையான செயலிகளை பலரும் நாடுகின்றனர். ஆனால் ஆன்லைன் கடன் செயலி நிறுவனங்கள் கடனை வசூலிக்கும் விதமே தனியாக இருக்கும். குறிப்பிட்ட காலத்திற்குள் கடன் தொகையை திருப்பி செலுத்தாவிட்டால் கூடுதல் வட்டி விதிக்கப்படும்.
ஆபாச மிரட்டல்
மேலும், நமது மொபைலில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் அலைபேசி எண்ணை எடுத்து கால் செய்து கடனை கட்ட சொல்லுமாறு கூறுவார்கள். பின்னர் நமது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்டு கடனை கட்டும்படி கூறுவார்கள். இது போன்ற ஆன்லைன் செயலி மூலம் கடன் பெற்று பணத்தை திருப்ப செலுத்த முடியாத பலர் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சென்னையில் மேலும் ஒருவர் ஆன்லைன் கடன் செயலியின் சித்திரவதையால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட இளைஞர்
சென்னை சூளைமேட்டை சேர்ந்த பாண்டியன் என்பவர் தனியார் ஓட்டலில் பணியாற்றி வந்துள்ளார். ஆன்லைன் கடன் செயலி மூலம் கடன் பெற்றுள்ளார். ஆனால் பாண்டியன் குறிப்பிட்ட காலத்தில் கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆதாரில் உள்ள அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப்பில் அனுப்பிவிடுவோம் என பாண்டியனை கடன் வசூலிக்கும் முகவர்கள் மிரட்டியதாக கூறப்படுகிறது.
வழக்குப்பதிவு
இந்நிலையில், அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி உள்ளனர். இதனால் மனமுடைந்த பாண்டியன் இன்று தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தற்கொலை செய்து கொண்ட பாண்டியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.