அரசு மருத்துவமனையில் இருந்து தப்பியோடிய போக்சோ குற்றவாளியை, திருப்பூரில் அதிரடியாக கைது செய்த தனிப்படை போலீசார்.
பாலியல் வன்கொடுமை
புதுக்கோட்டை காந்தி நகரைச் சேர்ந்தவர் தீபன்ராஜ். 40 வயதான இவருக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாகவே தீபன்ராஜ்க்கும் இவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்துள்ளது. அதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இவர்களுடைய இரண்டு வயது பெண் குழந்தை, தந்தை தீபன் ராஜுடன் வளர்ந்துள்ளது. இந்நிலையில், தீபன் ராஜ் தனது இரண்டு வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
போக்சோ சட்டம்
இதனையடுத்து தீபன்ராஜின் மனைவி தனது வீட்டிற்கு வந்தபோது, அவருக்கு இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. தனது கணவர் சொந்த மகளையே பாலியல் வன்கொடுமை செய்ததை அறிந்த மனைவி ஆத்திரமடைந்தார். மேலும், அவர் இது குறித்து புதுக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதன்பெயரில் போலீசார் தீபன்ராஜை கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவுச் செய்து, திருச்சி மத்தியச் சிறையில் அடைத்தனர்.
மருத்துவமனையில் அனுமதி
கடந்த, 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விசாரணை கைதியாக கைது செய்யப்பட்ட தீபன் ராஜூக்கு கடந்த 9ம் தேதி வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் திருச்சி மகாத்மா காந்தி நினைவு மருத்துவமனையில் கைதிகளுக்கான சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அந்த வார்டுக்கு வெளியே காவல் பணியில் சிறைக்காவலர்கள் ஈடுப்பட்டிருந்தனர். இந்நிலையில், அதிகாலை 4.30 மணிக்கு காவல்துறையினரை ஏமாற்றிவிட்டு தீபன்ராஜ் மருத்துவமனையில் இருந்து தப்பிச் சென்றார்.
தப்பியோட்டம்
தப்பியோடிய கைதியை காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். அதன்பெயரில் போலீசார் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது, தீபன்ராஜை மருத்துவமனை வாசலில் இருந்து ஒருவர் பைக்கில் அழைத்துச் சென்றது தெரியவந்தது. தீபன்ராஜ்க்கு உதவிய அந்த மர்ம நபர் யார் என்பதை பற்றி போலீசார் விசாரணை செய்தனர். விசாரணையில், தீபன்ராஜ்க்கு உதவியது அவரது அண்ணன் சத்யா என்பது தெரிய வந்தது. மேலும், கைதி திருப்பூரில் உள்ள தனது அண்ணன் வீட்டில் தான் பதுங்கியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
போலீசார் அதிரடி
திருப்பூருக்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் தீபன்ராஜை அதிரடியாக கைது செய்து, திருச்சிக்கு அழைத்து வந்தனர். இதனால் கைதி தீபன்ராஜ் தப்பியோடிய மருத்துவமனையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டிருந்த இருந்த கோவிந்தராஜன், பிரகாஷ், வினோத் குமார் ஆகிய மூன்று சிறை காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.