வருகிற 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து தமிழகத்தில் தங்களின் நிலையை உயர்த்திக் கொள்ள பா.ஜ.க பல்வேறு யுக்திகளை கையாளுகிறது. அதில் முக்கியமான ஒன்று கச்சத்தீவு பிரச்சனை. மத்திய அமைச்சர் அவர்களுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் வழங்கிய திட்டம்.
தமிழகத்தில் பா.ஜ.க வின் நிலை
என்னதான் ஆளுங்கட்சியாக இருந்தாலும், இந்தியாவில் பிற மாநிலங்களில் வளர்ச்சி கண்டிருந்தாலும், இப்போது வரை தமிழகத்தில் ஏற்ற இறக்கங்களை தான் சந்தித்து வருகிறது. இதுநாள் வரை அ.தி.மு.க வின் கூட்டணியில் குளிர் காய்ந்திருந்த பா.ஜ.க சிறிது காலமாக தனி ஆளுமையை தமிழ்நாட்டில் நிலைநாட்ட பெரிதும் போராடுகிறது.
தற்போது தமிழ்நாட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை செலுத்தும் வகையில் பா.ஜ.க கட்சி இலங்கை பிரச்சனைகளில் தலையிட்டு வருகிறார்கள். இதற்கு அடித்தளம் அமைத்தது தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை அவர்கள். மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் இதைப்பற்றி விவரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கச்சத்தீவு பிரச்சனை – இலங்கை பொருளாதார வீழ்ச்சி
இந்தியா இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது. அண்மையில் அண்ணாமலை அவர்கள் இலங்கைக்கு சென்று அங்குள்ள எம்.பி.களை சந்தித்திருந்தார்.
அதன் பின்னணி என்னவென்று பார்த்தால் இலங்கையில் தற்போது நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் விதமாகவும், தமிழீழ மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதாகும், கச்சத்தீவை மீண்டும் இந்தியாவோடு இணைப்பது போன்று பல திட்டங்களை மத்திய அமைச்சருடன் கலந்துரையாடியது போல தெரிகிறது. அமித்ஷா அவர்களும் இதற்கு செவிகொடுத்திருக்கிறார்.
தமிழகத்தின் மீது குறி
இப்போதைய பிரச்சனைகளில் கச்சத்தீவு பிரச்சனை தமிழக மீனவர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் ஒன்றாகும். கச்சத்தீவு இலங்கைக்கு ஒப்படைக்கும் போது காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இலங்கை தமிழர்கள் படுகொலை நடந்தபோது இந்தியாவில் காங்கிரஸ் – திமுக கூட்டணியில் இருந்தது. அந்த இரு கட்சிகள் மட்டுமல்ல, வேறு எந்த பெரிய கட்சியும் கேள்வி கேட்கவில்லை.
இப்போது பா.ஜ.க வின் இலங்கை மீதான கருணைப் பார்வை எந்த அளவிற்கு தமிழீழ மக்களுக்கு உதவி புரிய போகிறது, கச்சத்தீவை மீட்டெடுப்பார்களா, இதில் அவர்களின் ஆதாயம் என்ன, தமிழகத்தில் கால் பதிக்க இவர்களின் முயற்சி கை கொடுக்குமா! என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.