உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் மருத்துவ படிப்பை பற்றி நாங்கள் முடிவெடுக்க முடியாது. அது மத்திய அரசின் கையில் தான் உள்ளது என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
உக்ரைனில் மருத்துவப்படிப்பு
நீட் தேர்வு காரணமாகவும், மிக அதிகக் கல்விக் கட்டணம் காரணமாகவும், இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டதால், உக்ரைன் நாட்டிற்குச் சென்று மருத்துவம் படித்த பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் உக்ரைன் – ரஷ்யா இடையேயான கடும்போர் காரணமாகத் தாயகம் திரும்பினர்.

மாணவர்கள் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதுமட்டுமின்றி, மருத்துவக் கல்வியை மீண்டும் தொடர முடியுமா? என்ற ஐயத்தால் மிகுந்த மன உளைச்சலில் உள்ளனர்.
மருத்துவ படிப்பை தொடர்வது
தற்போதைய சூழலில் ரஷ்ய – உக்ரைன் போர் விரைவில் முடிவுற்றாலும், எதிர்காலத்தில் மீண்டும் எப்போது வேண்டுமானாலும் போர் வர வாய்ப்புள்ளதால், பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை மீண்டும் உக்ரைன் நாட்டிற்கு அனுப்பத் தயங்குகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலமே மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

இந்நிலையில், இந்திய அரசாங்கம் குறிப்பாக தமிழக அரசாங்கம் தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மருத்துவ படிப்பை தொடர வழி செய்யவேண்டும் என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் வேண்டுகோள் வைத்தனர். இதனால் நிச்சயமாக தமிழக அரசு தங்களுக்கு உதவி புரியும் என்று தமிழக மாணவர்களும், பெற்றோர்களும் மிகுந்த நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அந்த நம்பிக்கையை தமிழக அரசு தகர்த்துள்ளது.
அமைச்சர் மா. சுப்பிரமணியன்
இன்று கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்த முதியோர் நல மருத்துவமனை 151 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டது. கொரோனா பெரும்தொற்று காரணமாக இந்த மருத்துவமனை 800 படுக்கைகளோடு கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டது.

இப்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால் மீண்டும் இது முதியோருக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. ஆனால் சில வேலைப்பாடுகள் இருப்பதால், அந்த பணிகளை விரைவில் முடித்து, மருத்துவமனை செயல்ப்பாட்டுக்கு வரும்’ என்று தெரிவித்தார்.
அப்போது உக்ரைனில் இருந்து வந்த மாணவர்களின் மருத்துவ படிப்பை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அமைச்சர், ‘அந்த மாணவர்களுக்கு சீட் வழங்குவது குறித்து தமிழக அரசு முடிவெடுக்க முடியாது. அது மத்திய அரசு தான் முடிவு செய்யவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இந்த தகவல் இவ்வளவு நாட்கள் நம்பிக்கையோடு இருந்த மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

