பயணம்

ஐ!!!ரோப்பா – இரண்டு கலாச்சாரங்கள் ஒரே நகரம் – இஸ்தான்புல்

ஐரோப்பிய கண்டமும் ஆசிய கண்டமும் உரசிக்கொள்ளும் எல்லை பகுதியில் அமைந்துள்ள நாடு துருக்கி. அந்த துருக்கி நாட்டின் மிக பெரிய நகரம் தான் இஸ்தான்புல். உலகின் மிகப்பழமையான நகரங்களுள் ஒன்று இஸ்தான்புல். இந்த நகரத்த்தின் அழகை சொல்ல வார்த்தைகள் போதாது. ஒரு புறம் ஐரோப்பா மறுபுறம் ஆசியா என இரண்டு கண்டங்களுக்கு இடையில் பாலமாக அமைந்திருக்கும் அழகிய நகரம். இவ்வாறு இரண்டு கண்டங்களுக்கு பொதுவான நகரமாக இஸ்தான்புல் விளங்குவதால், இந்த நகரமே இரண்டுபட்டு காணப்படுகிறது. இரண்டு கலாச்சாரங்கள், இரண்டு அடையாளங்கள், இரண்டு விதமான மக்கள் என எல்லாமே இரண்டாக இருப்பது தான் இந்த நகரை காண லட்சக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் வர காரணம்.

எந்த வித தடைகளும் இல்லாமல் சுதந்திர பறவையாய் சுற்றி திரிந்து இந்த இஸ்தான்புல் நகரத்தை நீங்கள் காண விரும்பினால், குறைந்தது ஐந்து இரவுகள் நீங்கள் அங்கே கழிக்க வேண்டும்.அங்கே பார்ப்பதற்கு அவ்வளவு உள்ளன. உங்கள் மணி பர்ஸ் உங்களின் கையை கடிக்காத வண்ணம் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் சுற்றி பார்க்க விரும்பினால் இரண்டு நாட்கள் போதுமானது. முக்கியமான இடங்களை மேலோட்டமாக கண்டு ரசிக்கலாம்.

அந்த முக்கியமான இடங்களில் மிக மிக முக்கியமான ஒரு சுற்றுலா தலம் தான் ஹாகியா சோஃபியா (Hagia Sophia). ஒரு கிறிஸ்தவ தேவாலயமாக கட்டப்பட்டு, பின்னாளில் ஒரு மசூதியாக மாறி, பின்னர் ஒரு அருங்காட்சியகமாக மாறிய ஒரு பழங்கால கட்டிடம். வெளியே நின்று பார்த்தாலும், உள்ளே சென்று பார்த்தாலும், அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம்  உங்களை வாய்பிளக்க வைக்கும். இஸ்தான்புல் நகரத்து மக்கள் மார்தட்டி பெருமை போட்டுக்கொள்வது இந்த அழகிய கட்டிடம் தங்கள் நகரத்தில் இருப்பதை எண்ணித்தான்.  இஸ்தான்புல்லுக்கு வரும் சுற்றுலா பயணிகள் முதலில் காண விழைவது இந்த ஹாகியா சோஃபியாவை தான்.

ஹாகியா சோஃபியாவுக்கு எதிரில் உள்ள Blue Mosque என்கின்ற மசூதியும் உங்கள் பயண பட்டியலில் கட்டாயமாக இடம்பெற வேண்டிய இடமாகும். ஒரு இஸ்லாமிய வழிப்பாட்டுத்தலமாக இருந்தாலும், தொழுகை நேரம் தவிர மற்ற நேரங்களில் அனைத்து மதத்தினருக்கும் உள்ளே செல்ல அனுமதி உண்டு. காலணிகளை வெளியே கழட்டி வைத்துவிட்டு உள்ளே செல்லவேண்டும், பெண்கள் தங்கள் தலைமுடி வெளியே தெரியாதவாரு துணியால் மறைத்துக்கொண்டு உள்ளே வரவேண்டும் என ஒரு சில கட்டுப்பாடுகள் மட்டுமே இங்கு விதிக்கப்பட்டுள்ளன.

ஹாகியா சோஃபியாவுக்கு வடக்கே டோப்காபி அரண்மனை (Topkapi  Palace) என்ற அழகிய அரண்மனை அமைந்துள்ளது. ஒரு காலத்தில் ஐரோப்பிய கண்டத்தை தங்கள் முடியாட்சியின் கீழ் வைத்திருந்த ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் (Ottoman Empire) சுல்தான்கள் வாழ்ந்த அரண்மனை இது. இன்று ஒரு அருங்காட்சியகமாக செயல்பட்டு வரும் இந்த அரண்மனை, ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் சரித்திரத்தை உலகுக்கு எடுத்துக்கூறி வருகிறது.

இந்த அரண்மனையில் உள்ள ஹாரம் (Harem) என்ற பகுதி கண்டிப்பாக பார்த்தாக வேண்டிய ஒன்று. சுல்தானின் அந்தப்புறமாக விளங்கிய ஹாரம் , ஆடம்பர வாழ்க்கையின் உச்சக்கட்டம் என்றே சொல்லலாம். அனால் இந்த பகுதியை காண்பதற்கு மட்டும் சற்று கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

இஸ்தான்புல் நகரில் நாள்தோறும் சுமார் ஐந்து லட்சம் மக்கள் வந்து குவியும் ஒரு பிரம்மாண்ட சந்தை உள்ளது. இதன் பெயரே கிராண்ட் பஜார் (Grand Bazaar) என்பது தான். தோலினால் செய்யப்பட பொருட்கள் முதல், தங்க நகைகள், ஆடைகள்,காலணிகள்,இனிப்புகள் என எல்லாமே இங்கே கிடைக்கும்.

இஸ்தான்புல் நகரில் உள்ள உணவகங்களில் பெரும்பாலும் மக்கள் தெருவோரங்களில் அமர்ந்து உண்ணவே விரும்புகின்றனர். குறுக்கே ஓடும் சாலை, மாலை வேளைகளில் அந்த சாலையின் இருபுறமும் மேஜைகள் போட்டு மக்கள் அமர்ந்து உணவருந்தும் காட்சி பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமானதாக இருக்கும். ஏதேதோ நாடுகளில் இருந்து வந்து, யார் எவரென்றே தெரியாத மக்கள், தங்களுக்குள் நட்பு பாராட்டி ஒற்றுமையாக சிரித்து மகிழ்ந்து மாலை பொழுதை கழிக்கும் அந்த அற்புத தருணத்தை  கண்டுகளிக்க இஸ்தான்புல் நகருக்கு ஒரு முறையாவது நீங்கள் சென்று வர வேண்டும்.

Related posts