பயணம்

ஐ!!!ரோப்பா – மனதை மயக்கும் மைகோனோஸ் தீவு

ஐரோப்பிய கண்டத்தின் முக்கியமான சுற்றுலா தலங்களுள் ஒன்று கிரேக்க நாட்டில் உள்ள மைகோனோஸ் (Mykonos) தீவு. கிரேக்க நாட்டு தீவுகளில் மிகவும் அழகான தீவு மைகோனோஸ் தான்.  இந்த சிறிய தீவில் ஒரு பன்னாட்டு வானூர்தி நிலையம் அமைந்திருப்பது சற்றே ஆச்சர்யமூட்டும் விஷயம் தான். இந்த வானூர்தி நிலையத்திலிருந்து பல்வேறு ஐரோப்பிய நகரங்களுக்கு நேரடியாகவே வானூர்திகள் இயக்கப்படுகின்றன. நீங்கள் எந்த ஐரோப்பிய நகரத்தில் இருந்தாலும்
சில மணித்துளிகளில் மைகோனோஸ் தீவுக்கு எளிதாக வந்தடைந்து விடலாம்.

சரி….இந்த தீவில் அப்படி என்ன இருக்கிறது? எங்கு பார்த்தாலும் பளிச்சிடும் வெள்ளை நிற கட்டிடங்கள்..தார் சாலைகளுக்கு பதிலாக கருங்கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட மேடு பள்ளமான பாதைகள்..குளிர்ந்த கடல் காற்று,..கடலின் அலைகள் வந்து வந்து மோதி, வாசல் தெளித்து விட்டு போகும்  நடைபாதைகள்..அதனை ஒட்டியே அமைக்கப்பட்டுள்ள  உணவகங்கள்…கையில் குளிர்ந்த பழச்சாறோ சூடான தேனீரோ வைத்துக்கொண்டு கடல் அலைகளின் நாட்டியத்தை ரசித்த படி ஒரு ரம்மியமான மாலை பொழுதை கழிக்க வேண்டுமா?? மைகோனோஸ் தீவே சரியான தேர்வு.

 நாலாபுறமும் கடல்…கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஆங்காங்கே திட்டுகள் போல தீவுகள். குறுகலான தெருக்கள்…கண்ணுக்கு குளிர்ச்சியான வெண்மை நிற கட்டிடங்கள். இவை தான் மைகோனோஸ் தீவின் தோற்றங்கள்.குறுகலான தெருக்களுக்குள் தொலைந்து விடுவோம் என்ற எண்ணமே வேண்டாம்…எந்த தெருவில் நுழைந்தாலும் அது இறுதியாக கடற்கரைக்கு தான் நம்மை அழைத்துச்சென்று விடும். இந்த தீவில் அதிக நபர்கள் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வது அங்கே இருக்கும் பழங்கால காற்றாலைகளுக்கு (windmills) முன்னால் நின்று தான். காலையில் வெள்ளை வெளீரென பளிச்சிடும் இந்த காற்றாலைகள், மாலை மற்றும் இரவு வேளைகளில் மஞ்சள் விளக்கு வெளிச்சத்தில் கண்களுக்கு விருந்தளிக்கும்.

நீங்கள் தனி ஆளாக சென்றாலும் சரி,நண்பர்களுடன் சென்றாலும் சரி, குடும்பத்துடன் சென்றாலும் சரி, உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேற்ற மைகோனோஸ் தீவில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

வருடந்தோறும் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை சுற்றுலா பயணிகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கும். நிறைய செலவாகும் என்று நினைக்க வேண்டாம். ஐரோப்பிய நாடுகளில் மிகவும் குறைந்த செலவில் சுற்றி பார்க்க ஏதுவான நாடு கிரேக்கம் தான். அதிலும் மைகோனோஸ் தீவில் பொழுதை கழிக்க மற்ற ஐரோப்பிய நகரங்களை ஒப்பிடுகையில் குறைந்த செலவே ஆகிறது. அதிகபட்சம் 2  நாட்கள் சுற்றி பார்க்கலாம். ஆனால் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அனுபவத்தை நீங்கள் பெறுவீர்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

 

Related posts