பிரான்ஸ் நாட்டின் தலைநகரமும், மிகப்பெரிய நகரமாக இருக்கும் பாரீஸ் சுற்றுலா பிரியர்களின் கனவு தேசம். . கி.மு.52ல் பாரிசில் வாழ்ந்து வந்த இனக்குழுவினர் ரோமர் பாரிசீ என்ற பெயரால் அழைக்கப்பட்டனர். அதன் பிறகு இந்நகரம் லத்தீன் பகுதி என வழங்கப்படும் சீன் நதியின் இடது கரை விரிவடைந்தது. அதன்பின்னர் பாரிஸ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.பிரான்சின் வரலாறும், பாரம்பரியமும்!
ஒவ்வொரு அங்குலமும் வரலாறு கூறும் மண்ணாக இருப்பதுடன், பிரத்யேக கட்டிடக்கலையை நகர் முழுவதும் ஒரே பாணியில் கடைப்பிடித்திருப்பது, பாரிஸ் நகரின் சிறப்பு.
பாரிஸ் என்றவுடன் நம் நினைவுக்கு முதலில் வருது ஈபிள் கோபுரம் தான்.பத்தாயிரம் டன் இரும்பு கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட கோபுரம், 1889 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் நடந்த உலக கண்காட்சிக்காக தற்காலிகமாக அமைக்கப்பட்டது. இந்த கோபுரத்தை வடிவமைத்தவர் அலெக்ஸாண்ட்ரே குஸ்தாவ் ஈபிள் (Alexandre Gustave Eiffel) என்ற புகழ்பெற்ற கட்டிட கலைஞர் ஆவார். அவர் பெயரிலேயே இந்த இரும்பு கோபுரமானது இன்றளவும் அழைக்கப்பட்டு வருகிறது. ஈபிள் டவரைக் கட்டி முடிக்க பன்னிரண்டாயிரம் இரும்புத் துண்டுகளும் எழுபது இலட்சம் ஆணிகளும், தேவைப்பட்டிருக்கிறது. தற்காலிகமாகக் கட்டப்பட்ட இந்தக் கோபுரம் இன்று பாரிஸ் நகருக்கு மட்டுமல்லாது ஐரோப்பா கண்டத்துக்கே அடையாளமாக இருக்கிறது.
324 மீட்டர் உயரம் கொண்ட இந்த கோபுரம் ஒரு காலத்தில் உலகின் மிக உயரமான கட்டிடமாக விளங்கியது. ஈபிள் கோபுரத்தின் உச்சியில் சென்று பாரிஸ் நகரத்தின் மொத்த அழகையும் கண்டுகளிக்க மின்தூக்கிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. கோபுரம் முழுவதும் பொருத்தப்பட்டுள்ள ஒளி விளக்குகள் இரவு வேளையில் மின்னுவதை பார்க்க நம் இரு கண்கள் போதாது.
பாரிசில் சுற்றிப்பார்க்க வேண்டிய இடங்களில், லுவர் அருங்காட்சியகம் முதன்மையானது. பிரெஞ்சு, இத்தாலி பாணியில் கட்டப்பட்ட இந்த கட்டிடம் கட்டிடக்கலைக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட கலைப்பொருட்கள் உள்ள இந்த அருங்காட்சியகத்தில்தான், லியார்னாடோ டாவின்சியின் வரைந்த உலகப் புகழ் பெற்ற மோனோலிசா ஓவியம் இருக்கிறது. இந்த லுவர் அருங்காட்சியகத்தின் வாயிலில் கண்ணாடியால் கட்டப்பட்ட பிரமிட் ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை முழுவதுமாக சுற்றிப்பார்க்க ஒரு நாள் போதாது.
பாரிஸ் நகரத்தின் நடுவில் அமைந்துள்ள தீவு ஒன்றில் உலகப் புகழ்பெற்ற நாட்ரேடேம் (Notre Dame) தேவாலயம் அமைந்துள்ளது. சுமார் 200 ஆண்டுகள் உழைப்பில் இந்த தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது. 130 அடி நீளமுள்ள நாட்ரேடேம் தேவாலயத்தில், 69 அடி உயரத்தில் இரண்டு கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. பிரமிக்க வைக்கும் ஆலயத்தின் கண்ணாடி ஜன்னல்கள் கொள்ளை அழகுடன் காட்சியளிக்கின்றன.
இந்த தேவாலயத்தின் நடைபாதைகளில் இருபுறமும் பிரான்ஸ் நாட்டை ஆட்சி செய்த 28 மன்னர்களின் அழகான சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை இந்த தேவாலயத்தின் அழகுக்கு மேலும் கம்பீரத்தை கொடுக்கின்றன. இந்த தேவாலயத்த்தின் பிரம்மாண்ட கண்ணாடி ஜன்னல்களில் பைபிள் கதைகளில் வரும் நிகழ்வுகளை ஓவியமாக தீட்டி வைத்துள்ளனர்.
ட்ரையம்ப் ஆர்ச் எனப்படும் “வெற்றி வளைவு” பிரான்ஸ் மன்னனாக இருந்த நெப்போலியனின் புகழை நிலைநாட்ட அமைக்கப்பட்ட ஒரு நினைவுச்சின்னம் ஆகும். 1806ஆம் ஆண்டில், தான் பெற்று வந்த வெற்றிகளின் நினைவாக அவன் கட்டிய வளைவுதான் வெற்றி வளைவு. ஆனால் இதனைக் கட்டி முடிக்கையில் நெப்போலியன் உயிருடன் இல்லை.இந்த வெற்றி வளைவில் நெப்போலியன் மேற்கொண்ட போர்கள், அடைந்த வெற்றிகள், அதற்கு உறுதுணையாக விளங்கிய தளபதிகளின் பெயர்கள் ஆகியன இடம் பெற்றுள்ளன. கிட்ட தட்ட ஒரு பதினாறு மாடி கட்டிடத்தின் உயரத்தை கொண்ட இந்த வெற்றி வளைவை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
பாரிஸ் ஒரு பூங்கா நகரமும் ஆகும். இங்குள்ள பூங்காக்களில் மிகப்பெரியது லக்சம்பார்க் பூங்கா. 1612ல் அமைக்கப்பட்ட இந்த 2,24,500 சதுர மீட்டர் பரப்பளவு உடையது.பூங்காவின் மத்தியில் பெரிய குளம், குளத்தைச் சுற்றிப் புல்வெளிகள், அழகிய சிலைகள், இரண்டு அழகிய நீர்த்தாரைகள் என்று கண்ணிற்கு குளிர்ச்சியளிக்கின்றன.
வரலாறு படைத்த நகரம் பாரிஸ் ஆதலால் புகழ்பெற்ற மானிடர் பலரின் கல்லறைகள் உள்ளன. சுற்றுலாப் பயணிகள் கல்லறையைச் சுற்றிப் பார்க்கச் செல்லும் அதிசயம் இங்கேதான் தொடங்குகிறது. லக்சைஸ் என்னும் கல்லறை 109 ஏக்கர் பரப்பளவு கொண்டது. புகழ்பெற்ற கலைஞர்கள், அறிஞர்கள் சமாதிகள் அமைக்கப்பட்ட இந்த இடத்தின் அழகிய கற்சிலைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.
ஓவியம்,சிற்பம்,கட்டிடக்கலை,இசை என்று அனைத்து கலைகளையும் போற்றி பாதுகாத்து வரும் நகரம் பாரிஸ். இந்த அழகிய நகரத்தை ஒரு முறையேனும் சுற்றி பார்த்துவிடுவது நமது கடமை ஆகும்.