வணிகம்

அடி மஞ்ச கிழங்கே !!! – மஞ்சளின் வர்த்தக வரலாறு ஒரு சிறு பார்வை

தற்கால வணிகத்தை சற்று ஒதுக்கி வைத்து விட்டு பழங்காலத்து வணிகத்தை பற்றி எழுதலாம் என்று முடிவு செய்தேன். வணிகத்தை பற்றிய முதல் கட்டுரையில் என்ன எழுதலாம் என்று சிந்தித்த வேளையில்….”மங்களகரமா மஞ்சள்லருந்து ஆரம்பிப்போம் ” என்று ஒரு மனக்குரல் கேட்டது.  மஞ்சளிலிருந்தே தொடங்குவோம் என்று முடிவெடுத்து இக்கட்டுரையை தொடங்கினேன்.

மஞ்சள் வெறும் அழகுசாதன பொருளோ, சமையலுக்கு பயன்படும் பொருளோ மட்டுமல்ல. அதன் பயன்பாடுகள் கணக்கிலடங்காதவை. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இந்திய நிலப்பரப்பில் வாழ்ந்த பூர்வகுடிகள் மஞ்சளை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு அம்சமாகவே கருதி வந்தனர். 7 ஆம் நூற்றாண்டில் சீனா, 8 ஆம் நூற்றாண்டில் எகிப்து , 12 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆப்பிரிக்கா என்று உலகம் முழுவதும் மஞ்சளின் மகிமை மெல்ல மெல்ல  பரவியது. 1280 ஆம் ஆண்டு மார்கோ போலோ என்ற வர்த்தக பயணி, மஞ்சளை பற்றி தன்னுடைய நூலில் ” பூமியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படும் ஒரு கிழங்கு எவ்வாறு குங்குமப்பூவின் குணாதிசயங்களை தன்னுள் கொண்டுள்ளது?” என ஆச்சர்யத்துடன் பதிவு செய்துள்ளார்.

உலகின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் 80% மஞ்சள் நமது இந்திய நாட்டில் தான் பெருமளவு பயன்படுத்த படுகிறது. இந்திய துணைக்கண்டத்தை தாண்டி மஞ்சளானது மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்த படுகிறது. கி பி எட்டாம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து மஞ்சள் இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் வழியாக கப்பல்கள் மூலம் மேற்கத்திய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. கிழக்கு சீனா முதல் மேற்கு ஐரோப்பா வரை அமைக்கப்பட்ட “பட்டுப்பாதை” (Silk Road) வழியாக தரை மார்க்கமாகவும் மஞ்சள் பல்வேறு நாடுகளுக்கு எடுத்து செல்லப்பட்டு வணிகம் செய்யப்பட்டது. ( இந்த பட்டுப்பாதையை பற்றி தனியாக ஒரு கட்டுரையை விரைவில் வெளியிடுகிறேன்).

மஞ்சள் உணவாக மட்டும் இல்லாமல், அழகு சாதன பொருளாகவும்,மருந்தாகவும் பயன்படுத்த பட்டது. பல்வேறு கலாச்சாரங்களில் தங்களுடைய மத சடங்குகளிலும் மஞ்சளை தவிர்க்க முடியாத அம்சமாக சேர்த்து கொள்ள தொடங்கினார்கள்.   துணிகளுக்கு நிறத்தை சேர்க்க உதவும் நிறமியாகவும் (pigment ) பயன்படுத்தி வந்தனர். காகிதம் பயன்பாட்டுக்கு வருவதற்கு முன் பனை ஓலைகளை பயன்படுத்திய மனிதர்கள், அந்த பனையோலைகளை பூச்சிகள் சேதப்படுத்திவிடாமல் பாதுக்காக்க அவற்றின் மீது மஞ்சளை பூசி வந்தனர்.

இவ்வாறு எண்ணிலடங்கா பயன்பாடுகள் கொண்ட மஞ்சளை வாங்குவதற்கு இந்திய நிலப்பரப்பு எங்கே உள்ளது என தேடி திரிந்து , தங்கள் நாடுகளில் மஞ்சளை பயிரிட்டு வளர்க்க எண்ணி தோற்றுப்போன தேசங்கள் ஏராளம். இன்றளவும் இந்தியாவிலிருந்து  இறக்குமதி செய்யப்படும் மஞ்சளுக்கு உலக சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளில் இந்திய மஞ்சளின் வருகைக்கு எப்பொழுதுமே பச்சைக்கொடி தான். சில பல இறக்குமதி கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்திய மஞ்சள், குறிப்பாக தென்னிந்தியாவில் விளையும் மஞ்சளை வாங்குவதில் உலக நாடுகளில் உள்ள வணிகர்கள் இன்றளவும் பெரிய அளவில் ஆர்வம் காட்டுகின்றனர்.

Related posts