முதுகுளத்தூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் என்பவரை, தமிழக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த ராஜகண்ணப்பன் சாதி ரீதியாக இழிவுபடுத்தியாக புகார் கிளம்பிய நிலையில், ராஜகண்ணப்பனிடமிருந்து போக்குவரத்து துறை மாற்றப்பட்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வழங்கப்பட்டுள்ளது. போக்குவரத்துறை அமைச்சராக குன்னம் சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு நேற்று மாலை ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியானது.
இந்நிலையில், மேற்கொண்ட விவகாரம் குறித்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை கடுமையாக விமர்சித்துள்ளார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் தினகரன். “தொடர்ச்சியான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அமைச்சர் திரு.ராஜகண்ணப்பனை துறை மாற்றம் செய்துவிட்டால் அவர் புனிதராகிவிடுவார் என்று முதலமைச்சர் நினைக்கிறாரா? ‘எந்த அமைச்சர் தவறு செய்தாலும் உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்று ஆட்சிக்கு வந்தபோது அவர் கூறியது இதைத்தானா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், சாதிய வன்மத்தோடு நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கும் ஒருவரை, சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டிய பிற்படுத்தப்பட்டோர் நலத்துறைக்கு அமைச்சராக்குவதுதான் திரு.ஸ்டாலின் கண்டுபிடித்துள்ள திராவிட மாடல் போலும்?. ஒட்டுமொத்த இந்தியாவிலும் சமூக நீதியைக் காப்பற்றப் போவதாக புறப்பட்டிருக்கும் புதிய புரட்சி வீரர்களின் லட்சணம் இதுதானா? எனவும் தமிழக அரசையும், முதலமைச்சர் ஸ்டாலினையும் காட்டமாக விமர்சித்துள்ளார் தினகரன்.