தமிழ்நாடு

வடிவேலு போல் நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார் அண்ணாமலை ; ஆர்.எஸ் பாரதி காட்டம்!

நகைச்சுவை நடிகர் வடிவேலுவைப் போல தொடர்ச்சியாக நகைச்சுவை செய்துகொண்டிருக்கிறார் பாஜகவின் தமிழக தலைவர் அண்ணாமலை என விமர்சித்துள்ளார் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி.

தமிழகத்திற்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த சில நாட்கள் துபாய் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், முதல்வரும் அவரது குடும்பத்தாரும் துபாயில் முதலீடு செய்யவே சென்றுள்ளதாக குற்றச்சாட்டினை தெரிவித்திருந்தார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. இதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி சார்பில் உள்நோக்கத்துடன் முதல்வர் மீது அவதூறு பரப்புவதாக கூறி அண்ணாமலைக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பட்டது.

திமுகவின் இந்த நோட்டீஸ் குறித்து பேசிய அண்ணாமலை, திமுக முடிந்தால் கைது செய்து பார்க்கட்டும் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அண்ணாமலைக்கு பதிலளித்துள்ளார் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி. அதில், “காவல்துறை அதிகாரியாக இருந்த அண்ணாமலைக்கு சட்ட நடவடிக்கைகள் குறித்து புரிதல் இல்லாமல் உள்ளது வேடிக்கையாக உள்ளது. அவதூறு வழக்கு தொடுப்போமென நோட்டீஸ் அனுப்பினால், கைது செய்.. கைது செய் என்கிறார். சட்ட ரீதியிலான நடவடிக்கைகளில் அதுவும் நடக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், “குற்றச்சாட்டு ஒன்றினை பொதுவெளியில் வைத்த நபர் அதற்கான ஆதாரங்களை வெளியிடாமல், வடிவேலுவைப்போல் நானும் ரவுடிதான் என பிதற்றி திரிவது எப்படி ஏற்புடையதாகும்” எனவும் கேள்வியெழுப்பியுள்ளார் ஆர்.எஸ் பாரதி.

Related posts