ஆன்மீகம்

பிரம்மச்சர்ய அற்புதங்கள் – பராசக்தியை தாயாக ஏற்ற பரமஹம்சர்

பிரம்மச்சர்யம் என்பது இந்திய மண்ணுக்கே உரித்தான ஒன்றாக ஒரு காலத்தில் இருந்தது. மேற்கத்திய தத்துவ ஞானிகளும் மத குருமார்களும் மெல்ல மெல்ல இந்த ப்ரம்மச்சர்யத்தின் அற்புதத்தையும் மேன்மையையும் அறிந்து கொண்டு தங்களுடைய கலாச்சாரங்களிலும் பிரம்மச்சர்ய பயிற்சிகளை இணைத்துக்கொண்டனர். 18  மற்றும் 19  ஆம் நூற்றாண்டுகளில் நம் இந்திய மண்ணில் வாழ்ந்த எண்ணற்ற ஆன்மீக குருமார்களில் தவிர்க்க முடியாதவர் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். இவர் தான் சுவாமி விவேகானந்தரின் குரு என்பதும் நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.

சுவாமி விவேகானந்தர் ஒரு முறை தன்னுடைய குரு ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரை பற்றி கூறுகையில்…”எனது குருநாதர் பெண்களை தன்னுடைய தாயாகவே பார்த்தார். தெருவில் செல்லும் விலைமாதர்களை கூட தன்னுடைய தாயாகவே எண்ணினார். அவர்களின் பாதங்களை தொட்டு வணங்கி, தன்னுடைய கண்ணீரினால் அவர்களின் பாதங்களை கழுவியதை என் கண்ணாலேயே நான் பார்த்திருக்கிறேன்” என்று கூறினார்.

பிரம்மச்சரிய பயிற்சிகளுக்கு தடையாக இருப்பது எதிர்பாலின ஈர்ப்பு தான். இந்த தடையை போக்க பரமஹம்சர் இவ்வாறு எல்லா பெண்களையும் தன்னுடைய தாயாகவே பாவிக்க துவங்கினார். இவ்வாறு அவர் செய்வதை பலரும் எதிர்த்தார்கள். விலைமாதர்களையும் குற்றவாளிகளாக கருதப்பட்ட பெண்களையும் எவ்வாறு தாயாக உணர முடியும் என்ற கேள்வியையும் எழுப்பினார்கள்.

ஆனால் இந்த விமர்சங்களை எல்லாம் ராமகிருஷ்ணர் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. இந்த பிரபஞ்சம் முழுவதும் வியாபித்திருக்கும் பரம்பொருளான சக்தியின் வடிவமாகவே அனைத்து பெண்களையும் பார்த்தார் ராமகிருஷ்ணர். தன்னை காண வரும் பெண்களில் பலர் விரதம் இருப்பதை கூட எதிர்த்தார் ராமகிருஷ்ணர். பெண்கள் விரதம் இருப்பது, தன்னுடைய தாயாரான சக்தியே பட்டினி இருப்பது போன்றது என எண்ணினார். தாயை பட்டினிபோட்டுவிட்டு மகன் மட்டும் எப்படி உணவருந்த முடியும்? எனவே தன்னை காண வரும் பெண்களுக்கு முதலில் ஏதாவது  உணவை உண்ணக்கொடுப்பார் ராமகிருஷ்ண பரமஹம்சர்.

ஒரு தூய்மையான பிரம்மச்சாரி எவ்வாறு வாழ வேண்டும் என்பதற்கு ஸ்ரீ ராமகிருஷ்ணரின் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. எங்கும் வியாபித்திருக்கும் பிரபஞ்ச சக்தியின் மனித வடிவாகவே அவர் பெண்களை பார்த்தார். ப்ரம்மச்சர்யத்தில் திளைத்திருக்கும் ஒரு ஆன்மாவின் சிந்தனையில் எழும் உட்சபட்ச தூய எண்ணத்தின் வெளிப்பாடு தான் இது.

Related posts