உப்பில்லா பண்டம் குப்பையிலே என்ற பழமொழியின் மூலம் உப்பின் அவசியத்தை நாம் நாகு அறிந்து வைத்துள்ளோம். இந்த உப்பானது, கடலில் மட்டும் அல்லாமல், பூமிக்கடியில் பல ஆயிரம் அடிகள் ஆழத்தில் கூட வெள்ளை நரம்புகள் போல படிந்து கிடக்கும். கடலிலிருந்து உப்பை பிரித்தெடுக்கும் தொழில்நுட்பத்தை மனிதன் மிக தாமதமாகவே அறிந்துகொண்டான்.
பட்டுப்பாதை (Silk Road) போலவே உப்புக்கென்று தனி வணிக பாதைகளும் பண்டைய காலங்களில் இருந்தன. அப்படிப்பட்ட “உப்புப்பாதை”களில் ,ஆப்பிரிக்க கண்டத்தினுள் அமைக்கப்பட்ட மொரோக்கோ முதல் மாலி வரை நீண்ட ஒரு குறிப்பிட்ட உப்புப்பாதை மிகவும் பிரபலமானதாக இருந்தது.
எகிப்து நாட்டிலிருந்து கப்பல்களில் உப்பு ஏற்றப்பட்டு கிரேக்க நாடு வரை கொண்டு சென்று வணிகம் செய்யப்பட வரலாறும் உண்டு. ஆசிய கண்டத்தில் இவர்ந்து கொண்டு வரப்பட்ட மிளகு மற்றும் சீரகத்தை கொடுத்து உப்பை வாங்கி சென்றுள்ளனர் ரோம் நகர மக்கள். 1295 ஆம் ஆண்டு வர்த்தக பயணியான மார்கோ போலோ தனது நூலில் , கல் உப்பினால் செய்யப்பட்ட நாணயங்கள் குறித்து பதிவு செய்துள்ளார்.
6 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில், மத்திய ஆப்பிரிக்க கண்டத்தில் தங்கத்தை கொடுத்து உப்பை வாங்கிய வரலாற்று பதிவுகளும் உள்ளன. இப்படி விலைமதிப்பற்ற பொருளாக கருதப்பட்ட உப்பு, நாணய வடிவில் செதுக்கப்பட்டு பணமாகவும் பயன்படுத்தப்பட்டது.
பண்டைய ரோம் நாட்டில் ராணுவ வீரர்களுக்கு கூலியாக உப்பும் சேர்த்து வழங்கப்பட்டது. அதற்கு, “Solarium Argentum ” என்று பெயரிட்டனர். காலப்போக்கில் இந்த சொல்லாடலே “Salary” என ஆங்கிலத்தில் திரிந்தது. இவ்வாறு உப்பும் ஒரு நாணயமாக கருதப்பட்டதால், உப்பை பயன்படுத்த தனியே வரியும் விதிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டில் பதினாறாம் லூயி மன்னரின் ஆட்சிக்காலத்தில் உப்பின் மீது விதிக்கப்பட்ட வரியை செலுத்த மக்கள் மறுத்தனர். இதன் விளைவாகவே பிரெஞ்சு புரட்சி வெடித்தது.
நம் இந்திய நாட்டிலும் 1930 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசு உப்பின் மீது விதித்த கடுமையான வரியை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் உப்பு சத்யாகிரஹத்தை மேற்கொண்டு, தண்டி கடற்கரை வரை பயணம் செய்தார்.
இன்று நாம் அசால்ட்டாக பயன்படுத்தும் இந்த சால்ட்டுக்கு பின்னால் இவ்வளவு பெரிய வரலாறு உள்ளது. பலரின் வியர்வையும் கண்ணீரும் அந்த வரலாற்றில் கலந்திருப்பதாலோ என்னவோ, உப்பின் விலை குறைவாக இருப்பினும் அதன் உவர்ப்பு சுவை மேலும் கூடியிருக்கிறது.