மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மலர்கண்காட்சியை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
ஊட்டி மலர் கண்காட்சி
பொதுவாக ஊட்டியில்தான் மலர் கண் காட்சி, எல்லா வருடமும் மே மாதம் ஊட்டி பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகை தருவர். 150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் அலங்கரித்து வைக்கப்படும்.
அரிய வகை மலர்களையும் இந்த ஊட்டி மலர் கண்காட்சியில் காணலாம். இந்த மலர் கண்காட்சிக்கு கட்டணம் வசூலிக்கப்படும். பல்வேறு இடங்களில் இருந்து மக்கள் கூட்டம் திரண்டு வந்து இந்த மலர் கண்காட்சியை காண்பர்.
முதன்முறையாக
சென்னையில் முதன்முறையாக கலைவாணர் அரங்கில் தோட்டக்கலை சார்பில் உருவாக்கப்பட்ட மலர்கண்காட்சியை திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். இவருடன் மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டனர்.
4 லட்சம் மலர்கள்
சுமார் 4 லட்சம் மலர்கள் மற்றும் பலவகை பழங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருக்கும் கருணாநிதியின் இருவேறு உருவங்கள் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர்கண்காட்சி இன்று தொடங்கி ஞாயிற்று கிழமை வரை நடைபெறவுள்ளது.
எல்லா வருடமும் நடைபெறும்
கண்காட்சியை பார்வையிட்ட வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ‘மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளன்று சென்னையில் முதன்முதலாக மலர்கண்காட்சி திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஊட்டி மற்றும் கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் மட்டும் நடைபெறும் மலர் கண்காட்சி தற்போது சென்னையில் நடைபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது.
அங்கு நடைபெறும் மலர் கண்காட்சியை காண 100 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும், இந்த கண்காட்சி சென்னையில் முதல்முறையாக நடைபெறுவதால் பாதியாக 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதிலும் மாணவர்களுக்கு சிறப்பு சலுகையாக 20 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. தொடர்ந்து இனிவரும் எல்லா வருடங்களிலும் சென்னையில் மலர் கண்காட்சி நடத்தப்படும்’ என செய்தியாளர்களிடம் வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கூறினார்.