Editor's Picksஇந்தியா

ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் ; வீழ்த்த முடியாத சக்தியாக உருவெடுக்கும் பாஜக!

பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், உத்திர பிரதேசம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியானது. மேற்கண்ட ஐந்து மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் பரப்புரையில் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகளுடன், அந்தந்த மாநில பிராந்திய கட்சிகளும் மும்முரமாக பரப்புரையில் ஈடுபட்டன.

குறிப்பாக, உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலானது சிறப்பு கவனம் பெற்றிருந்தது. அதற்கான காரணம், அம்மாநிலத்தில் அதிக அளவிலான மக்களவை தொகுதிகள் இடம்பெற்றுள்ளதுவும், எதிர்வரும் 2024 மக்களவை தேர்தலில் இந்த சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடுமென்பதுதான்.

இந்த நிலையில் உத்திர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக 244 இடங்களில் முன்னிலை பெற்று ஆட்சியமைப்பதற்கான அறுதிப் பெரும்பான்மையை பெற்றுள்ளது. பாஜகவின் இந்த வெற்றியின் மூலம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அம்மாநில முதல்வராக பதவியேற்க உள்ளார் யோகி ஆதித்யநாத்.

கோவா :

கோவா சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரங்கள் அடிப்படையில் அங்கு மொத்தமுள்ள 40 இடங்களில் சுமார் 20 இடங்களில் பாஜக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இதன் மூலம் அங்கும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது பாஜக.

 

மணிப்பூர் :

உத்திரபிரதேசம், கோவா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளின் முன்னணி நிலவரங்களைப்போலவே மணிப்பூர் சட்டப்பேரவைக்கான வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரங்களின் அடிப்படையில் அங்கு மொத்தமுள்ள 60 இடங்களில் சுமார் 20 இடங்களில் முன்னணி வகிக்கிறது பாஜக. இதன் காரணமாக மணிப்பூரிலும் பாஜகவின் ஆட்சி அமைந்திட கூடுமென்றே கருதப்படுகிறது.

பஞ்சாப் :

பஞ்சாப் மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளை பொறுத்த வரையில் அங்கு மொத்தமுள்ள 117 இடங்களில் சுமார் 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது ஆம் ஆத்மி கட்சி. டெல்லி யூனியன் பிரதேசத்தை தொடர்ந்து ஆம் ஆத்மி ஆட்சியமைக்கும் இரண்டாவது மாநிலம் பஞ்சாப் ஆகும்.

உத்தரகாண்ட் :

உத்தரகாண்ட் மாநில தேர்தல் முடிவுகளை பொறுத்த வரையில் அங்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 48 ல் வென்று அறுதிபெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்கிறது பாஜக.

ஆக, மேற்கண்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளைப் பொறுத்தமட்டில் சுமார் நான்கு மாநிலங்களில் ஆட்சி அமைக்க உள்ளது பாஜக. எதிர்வரும் 2024 மக்களவை தேர்தல் முடிகளின் முன்னோட்டமே இது என நெஞ்சம் மகிழ்கின்றனர் பாஜகவினர்.

 

Related posts