அரசியல்சமூகம்தமிழ்நாடு

செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார் – அண்ணாமலை!

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த முதல்நாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

மானநஷ்ட வழக்கு

தமிழகத்தில் திமுகவை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறது பாஜக. திமுக அரசு மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. முதலமைச்சரின் துபாய் பயணம், அமைச்சர் செந்தில் பாலாஜியின் மின் வாரிய முறைகேடு என்று வரிசையாக பல புகார்களை பாஜக தெரிவித்து வருகிறது.

திமுக அரசு மீது தொடர்ந்து தவறான குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது மான நஷ்ட வழக்கை திமுக தொடுத்துள்ளது.

செந்தில்பாலாஜி, அண்ணாமலை

செய்தியாளர் சந்திப்பு

கோவை மசக்காளிப்பாளையத்தில் பாஜக அரசின் 8 ஆண்டு சாதனையை விளக்கும் வகையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இதனையடுத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியை விசாரணைக்கு அழைத்தற்கு காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்கள் மூலம் மக்களின் அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தி வருகிறார்கள். மேலும், தினமும் 200 பேரை அழைத்துக்கொண்டு கே.எஸ்.அழகிரி சாலையில் சென்று பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கிறார்.

அண்ணாமலை

உட்கட்சி விவகாரம்

ஒற்றை தலைமை அதிமுகவின் உட்கட்சி விவகாரம். அதில் பாஜக என்றும் தலையிடாது, தலையிடப்போவதும் இல்லை. பாஜக தனிமனிதர்களை எப்போதும் முன்னிலைப்படுத்தாது. எப்போதும் சித்தாந்ததை முன்னிலைப்படுத்துவோம். கட்சியின் தொண்டர்களை முன்னிலைப்படுத்துவோம்.

செந்தில்பாலாஜி கைது

இதனையடுத்து தமிழக மின்சார வாரியத்தின் மின் திட்ட ஒப்பந்தம் அனைத்து விதிகளையும் மீறி பி.ஜி.ஆர் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எங்களிடம் அனைத்திற்கும் ஆதாரம் உள்ளது. அதனால் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தப்பிக்க முடியாது. தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் போது முதல்நாள் முதல் ஆளாக செந்தில்பாலாஜி கைது செய்யப்படுவார்’ என்று அண்ணாமலை கூறினார்.

 

Related posts