ராமநாதபுரம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் ஏற்பட்ட திடீர் விரிசல் காரணமாக ஏற்படவிருந்த பெரும் ரயில் விபத்தை ரயில்வே ஊழியர் சாதுரியமாக செயல்பட்ட காரணத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்தியன் ரயில்வே
இந்தியாவில் விமானத்தை விட பொதுமக்கள் ரயிலில் அதிகமாக பயணித்து வருகின்றனர். ஆண்டிற்கு சுமார் 500 கோடி மக்கள் பயணம் செய்கின்றனர். 14,444 தொடர்வண்டிகளும், 13 லட்சம் ஊழியர்களும் பணி செய்து வருகிறார்கள். இந்தியாவில் அவ்வப்போது ரயில் விபத்துகள் நடப்பதும், சில நேரம் ரயில்வே ஊழியர்கள் சாதுரியமாக செயல்பட்டு விபத்தை தடுப்பது இயல்பான ஒன்றுதான். அந்த வகையில் ராமநாதபுரத்தில் கீ மேன் ஒருவர் விரைவாக செயல்பட்டு விபத்தை தடுத்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் அருகே வாலாந்தரவை என்ற பகுதியில் ரயில் நிலையம் உள்ளது. இங்கு வழக்கம்போல் கீமென் வீரப்பெருமாள் வாலாந்தரவை ரயில் தண்டவாளங்களை சரி செய்யும் பணியை செய்து வந்தார். அப்போது ரயில் நிலையம் அருகே 100 மீட்டர் தூரத்தில் தண்டவாளத்தில் பெரும் விரிசல் ஏற்பட்டதை கண்டு அதிர்ச்சியுற்றார்.
தண்டவாளத்தில் விரிசல்
அந்த நேரத்தில் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் ராமேஸ்வரம் அதிவிரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து சாதுரியமாக செயல்பட்டு தனது கையில் இருந்த சிவப்பு கொடியை காட்டி சுமார் 200 மீட்டர் ரயில் வரும் தண்டவாளத்தில் ஓடினார். இதனை கண்ட ரயில்வே ஓட்டுநர்கள் மற்றும் ரயில்வே கார்டு சாமர்த்தியமாக அதிவேகமாக வந்த ரயிலை நிறுத்தினார்கள். பின்னர் ரயில்வே ஊழியர்கள் மூலமாக தண்டவாளத்தில் இருந்த விரிசலை தற்காலியமாக சரிசெய்து ரயிலை ராமேஸ்வரம் நோக்கி இயக்கப்பட்டது.
சரிசெய்யும் பணி
மேலும், இதுபற்றி தகவல் அறிந்த ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். ரயில்வே ஊழியர்கள் சுமார் ஐந்து மணி நேரமாக தண்டவாளத்தில் இருந்த விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். மேலும், தண்டவாள விரிசல் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. பெரும் விபத்தில் இருந்து ரயில் பயணிகளை காப்பாற்றிய கீமென் வீரப்பெருமாளை பொதுமக்கள் நேரிலும், சமூக வலைத்தளத்திலும் வெகுவாக பாராட்டிவருகின்றனர்.