நடிகை சாய் பல்லவி சமீபத்தில் கூறிய கருத்துக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டுள்ளது.
விரத பர்வம் படம்
நடிகை சாய் பல்லவி, நடிகர் ராணாவுடன் சேர்ந்து நடித்துள்ள படம் விரத பர்வம். படம் இந்த வாரம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதனால் விரத பர்வம் படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுப்பட்டு வந்தனர். இதன்பெயரில் நடிகை சாய் பல்லவி பேட்டி ஒன்றை அளித்தார். அந்த பேட்டியில், வன்முறை எழுச்சியை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
சாய் பல்லவி பதில்
அதற்கு பதிலளித்த சாய் பல்லவி, ‘நான் நடுநிலையான குடும்ப சூழ்நிலையில் வளர்க்கப்பட்டவள். வலதுசாரி, இடதுசாரி என்பதைவிட நல்ல மனிதராக இருக்க வேண்டியது அவசியம். நான் நடுநிலையானவள், காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காஷ்மீர் பண்டிட்டுகள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்று காட்டப்பட்டுள்ளது.
ஆனால் சமீபத்தில் பசுவைக் கொண்டு சென்ற ஒரு நபரை இஸ்லாமியர் என்று கருதி ஒரு கும்பல் படுகொலை செய்துவிட்டு ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டது. காஷ்மீரில் நடந்த சம்பத்திற்கும், தற்போது நடக்கிற இந்த சம்பவத்திற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் எந்த சுழலிலும் வன்முறை தவறான அணுகுமுறை’ என்று நடிகை சாய் பல்லவி கூறியிருந்தார்.
கடும் எதிர்ப்பு
அவரின் இந்த வெளிப்படையான கருத்துக்கு பலரும் தனது ஆதரவை தெரிவித்து வந்தனர். சாய் பல்லவி தைரியமாக பேசி உள்ளார் என்றும், அவர் பேசியதுதான் சரிதான் என்றும் பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும், அவர் பேசிய காட்சி பரவலாக சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. அதே நேரத்தில் சிலர் சாய் பல்லவியின் கருத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்தனர். அந்த வகையில் இந்துத்துவா ஆதரவாளர்கள் பலரும் சாய் பல்லவியின் கருத்துக்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். சாய் பல்லவி இரண்டையும் ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார்கள்.
போலீசில் புகார்
இந்நிலையில், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர், நடிகை சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அந்த புகாரில், நடிகை சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமமாக ஒப்பிட்டு பேசியது தவறு. இதனால் நடிகை சாய் பல்லவி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் நடிகை சாய் பல்லவியின் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.