துணை முதலமைச்சர் பதவிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதால் அதை ஏற்றுக் கொண்டேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
அதிமுகவின் நிலை
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவி உருவாக்கப்பட்டு கட்சி இயங்கி வந்தது. இதனையடுத்து கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றால் ஒற்றை தலைமை அவசியம் என்று அதிமுக நிர்வாகிகள் கூறத்தொடங்கினர். அதனால் தற்போது ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. ஓபிஸ் மற்றும் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு ஊர் முழுவதும் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.
பொதுச் செயலாளர் பதவி
இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘துணை முதலமைச்சர் பதவிக்கு அதிகாரமில்லை என்று தெரிந்தும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியதால் அதை ஏற்றுக் கொண்டேன். பொதுச் செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு மட்டுமே உரித்தானது, அதை வேறு ஒருவருக்கு கொடுக்க நினைத்தால் அது அவருக்கு செய்யும் துரோகம்.
ஒற்றை தலைமை
ஆட்சி பறி போகக்கூடாது என்று நானும் எடப்பாடி பழனிசாமியும் ஒன்றாக இணைந்தோம். ஆறு ஆண்டுகளாக எந்த பிரச்னையும் இல்லை. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றை தலைமை பற்றி பேட்டி கொடுத்ததால் தான் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இன்றைய கால கட்டத்தில் இரட்டை தலைமை நன்றாக செல்கிறது. அனைத்து உட்கட்சி தேர்தலையும் நடத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்று முறைப்படி தேர்ந்தெடுத்த பிறகு இப்படி ஒரு குழப்பம் தேவையா ?
மேலும், இந்த ஒற்றை தலைமை பிரச்சனை எனக்கு மிகப்பெரிய வருத்தம் அளிக்கிறது. 14 பேர் கொண்ட உயர்மட்ட குழு என்ன சொல்கிறதோ அதை தலை வணங்கி ஏற்பேன். 23ம் தேதிக்குள் சுமூகமான முடிவு எட்டப்படும் என்று நான் கடவுளை வேண்டி கொள்கிறேன்’ என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.