10 மற்றும் 12ம் வகுப்பு பொதுதேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கல்வித்துறை அமைச்சர்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த மக்களுக்கு வீட்டுமனை பட்டா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி காட்டூர் பகுதியில் நடைபெற்றது. அதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அமைச்சர், ‘இந்த நிகழ்ச்சியில் 167 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. 40 மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.
முதல்வர் அறிவுறுத்தல்
கல்வி துறை சார்பான நிகழ்ச்சிகளுக்கு ஒன்றிய அரசு நம்மை இறுதி நேரத்தில் தான் அழைக்கிறார்கள். குஜராத்தில் நடந்த கல்வி அமைச்சர் மாநாட்டில் கூட அவ்வாறே அழைத்தனர். தமிழ்நாட்டில் கல்வித்துறை சார்பாக பல நிகழ்ச்சிகள் முதலமைச்சரின் அறிவுறுத்தலின் படி நடத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என முதல்வர் அறிவுறித்தியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு
மாநில கல்வி கொள்கையை உருவாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. நமது மாநிலத்திற்கு என்ன தேவை என்பதை நாமே முடிவு செய்து அதன்படி நடைமுறை படுத்தவோம். அது தான் நம் மாநிலத்திற்கும் நல்லது. கண்டிப்பாக ஜூன் 13ம் தேதி அன்று பள்ளிகள் கண்டிப்பாக திறக்கப்படும்’ என அமைச்சர் தெரிவித்தார்.
கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி திறப்பதில் ஏதும் மாற்றங்கள் செய்ய வேண்டுமா அல்லது விதிமுறைகள் பின்பற்ற வேண்டுமா என்று கேள்வி எழுப்பப்பட்டது. ‘இது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆலோசனையின் அடிப்படையில் அரசு முடிவெடுக்கும். அல்லது முதல்வரின் ஆலோசனை படி செயல்படுவோம்.
மறுதேர்வு
மேலும், 10, 11,12 ஆகிய தேர்வில் சுமார் 6 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதவில்லை. பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களை அழைத்து அடுத்து நடைபெறும் உடனடி தேர்வை எழுத வைக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. ஜூன் மாதம் தேர்வு நடத்தப்படும்’ என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
திருவெறும்பூர் தொகுதியில் நடந்த இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாநகராட்சி துணை மேயர் திவ்யா, மாவட்ட ஆட்சியாளர் சிவராசு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.