உலகம்

கணவன் மனைவி கட்டிப்பிடிக்க முத்தமிட தடை..கொரோனா ஊரடங்கில் சீனாவின் புதிய கட்டுப்பாடுகள்!

சீனாவின் நிதி மையமான ஷாங்காய் நகரில், கோவிட் பரவுவதைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் “தம்பதியினர் ஒன்றாக உறங்க வேண்டாம். கட்டிப்பிடித்தல் முத்தங்கள் வேண்டாம்!” என்பதும் ஒன்றாகும்.

கோவிட் காரணமாக பூட்டப்பட்டிருக்கும் ஷாங்காய் நகர உள்ளூர்வாசிகள் மிகவும் கடினமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். மக்கள், தங்களை நாய்களை நடத்துவது போன்று நடத்துகிறார்கள் எனவும், பொது பணியினர் அன்றாட பணிகளை எவ்வாறு கையாளுகிறார்கள் என்பதைக் காட்டும் விதமாகவும் சமூக ஊடகங்களில் காணொளிகளை சாட்சிகளாக வெளியிட்டு வருகின்றனர்.

சீனாவில் தற்போதைய கோவிட்-19 பரவலின் ஹாட் ஸ்பாட் ஷாங்காய் நகர் ஆகும். கடந்த சில நாட்களில் தினசரி நோய்த்தொற்று எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இன்னும் அதிகமாகவே உள்ளது. இந்த நகரத்தில் வசிக்கும் 26 மில்லியன் மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ட்விட்டரில் ஷாங்காய் குடியிருப்பாளர்களால் வெளியிடப்பட்ட வீடியோக்களில் குடியிருப்பாளர்கள் தங்கள் பால்கனியில் தங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படாததை எதிர்த்துப் பாடிக்கொண்டிருந்தனர். அப்பொழுது  ட்ரோன்கள் மூலம் அறிவிப்புகள் வெளியாயின.

ட்ரோன்கள் கோவிட்-19 கட்டுப்பாடுகளுக்கு இணங்குமாறு மக்களை வலியுறுத்தின, “உங்கள் சுதந்திரத்திற்கான விருப்பத்தைக் கட்டுப்படுத்துங்கள். ஜன்னலை திறக்கவோ, பாடவோ வேண்டாம்” என்றும் அறிவிப்புகள் வெளியாயின.

“இன்றிரவு முதல், தம்பதிகள் தனித்தனியாக தூங்க வேண்டும், முத்தமிட வேண்டாம், கட்டிப்பிடிக்க அனுமதி இல்லை, தனித்தனியாக சாப்பிட வேண்டும். உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி” என்றும் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்புகள் வெளியாயின.

அண்டை நாட்டில் நோய் பரவல் அசுர வேகத்தில் அதிகரித்துக் கொண்டிருக்க நாம் கோவிட் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்க விட்டுக் கொண்டிருக்கிறோம்.

Related posts