அரசியல்தமிழ்நாடு

திமுக-வை கண்டித்து விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்.. கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம்!

தாலிக்குத் தங்கம், பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர், அம்மா மினி கிளினிக் போன்ற அதிமுக கொண்டுவந்த திட்டங்களை எல்லாம் திமுக அரசு ஓரம்கட்ட தொடங்கி இருக்கிறது. திமுக வின் இந்த செயப்பாட்டை நீண்ட நாட்களாக அதிமுக வினர் கண்டித்து வருகின்றனர்.

மேலும் தமிழகத்தில் சொத்து வரி, அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 200 சதவீதம் அளவுக்கு திமுக அரசால் உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் மக்கள் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி, அன்றாட வாழ்வை பாதிக்கும் ஊரடங்கை எதிர்கொண்டு இப்போதுதான் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதுபோன்ற சூழலில் சொத்து வரியை அதிகரித்து திமுக அரசு மக்கள் மீது பெரும் சுமையை திணிக்கிறது என அதிமுக கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

சொத்து வரி உயர்வை திரும்ப பெறுமாறு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிமுக, சொத்து வரி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. சென்னையில் ஓபிஎஸ் தலைமையிலும், சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தலைமையில் இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. பழைய பேருந்து நிலையத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தால் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், தாலிக்குத் தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர், அம்மா கிளினிக் உள்ளிட்ட அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு ஓரம்கட்ட நினைக்கிறது. மாதந்தோறும் மாணவர்களுக்கு ரூ 1000 உதவித் தொகை திட்டத்தை செயல்படுத்துவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது. கொரோனா பாதிப்பால் மக்கள் கஷ்டத்தில் இருக்கும் போது சொத்துவரியை 200 சதவீதம் அளவுக்கு உயர்த்துவது எப்படிப்பட்ட ஒரு செயல் என்று கேள்வி எழுப்பினார்.

ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரம் கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டதால் விழுப்புரத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவலர்கள் கூட்டத்தை முடித்துக்கொண்டு வெளியேறுமாறு கூறியும் தொண்டர்கள் கலையாததால் முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் உட்பட பல அதிமுக நிர்வாகிகள் கைதுசெய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்ட நபரை அரைநிர்வாணமாக்கி தாக்கிய வழக்கில் சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைதுசெய்யப்பட்டார். அப்போது பேசிய சிவி சண்முகம், திமுக அரசு செய்த தவறை சுட்டிக் காட்டிய ஜெயக்குமாரை கைது செய்துள்ளனர். கைதுக்கு அதிமுக என்றும் அஞ்சியது கிடையாது. பலமுறை சிறைவாசம் அனுபவித்தவர்கள்தான் அதிமுகவினர். என்னை கைது செய்ய வாருங்கள், நான் தயாராக இருக்கிறேன் என சிவி சண்முகம் சவாலாக பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.