இந்தியா

கர்நாடகாவில் தொடரும் மதவாத போக்கு.. இஸ்லாமியர்கள் வியபாரத்திற்கு அதிகரிக்கும் சிக்கல்!

ஹிஜாப் பிரச்சனை கர்நாடகாவில் தொடங்கிபோதே அது இந்து முஸ்லீம் பிரச்சனையாக அம்மாநிலம் முழுவதும் பரவ தொடங்கிவிட்டது. கர்நாடக உயர்நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதை தடைசெய்ததை அடுத்து முஸ்லிம்களுக்கு எதிரான செயல்பாடுகள் கர்நாடகாவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கடலோர கர்நாடக மாவட்டங்களில் கோவில் திருவிழாக்களின்போது கடைகள் நடத்த முஸ்லிம் வியபாரிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஹலால் இறைச்சிகளை ஹிந்துக்கள் யாரும் வாங்கக்கூடாது என இந்து அமைப்பினர் பிரச்சாரம் செய்தனர். பழ வியாபாரம் நடத்தும் இஸ்லாமியர்கள் பழங்களில் எச்சில் துப்பி விற்பதாகவும், அவர்கள் விற்கும் பழங்களை யாரும் வாங்கக்கூடாது என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

இதற்கிடையே, மசூதிகளில் தொழுகைக்கு அழைக்கும் ஒலிபெருக்கிகளுக்கு எதிராக சில இந்து அமைப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர். தாங்களும் கோவில்களில் போட்டிக்கு ஒலி பெருக்கிகள் மூலம் சாமி பாடல்கள் ஒலிக்கசெய்ய போவதாக கூறிவருகின்றனர்.

பட்டுக்கூடு வியாபாரம்

கர்நாடகாவில் அதிகமாக பட்டுக்கூடு உற்பத்திச் செய்யப்படும் இடமாக கோலார் மாவட்டம் உள்ளது. இந்நிலையில், கோலாரில் உள்ள மார்க்கெட்டில் பட்டுக்கூடுகளை இந்து வியாபாரிகளிடம் மட்டுமே விவசாகிகள் விற்க வேண்டும் என சிலர் கூற தொடங்கியுள்ளனர்.

இந்த நடவடிக்கைகளை முஸ்லிம் வியாபாரிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். கோலார் மாவட்டத்தில் பட்டுக்கூடு வியாபாரத்தில் முஸ்லிம்கள்தான் அதிக அளவில் ஈடுபட்டு வருகின்றனர். இந்து வியாபாரிகளின் இத்தகைய செயல்பாடு அவர்களுக்கு பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து முஸ்லிம் வியாபாரிகள் பேசியபோது ‘ வியாபாரம் என்பது அனைத்து மதத்தினருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். இரு மதத்தினருக்கு இடையே ஏற்படும் இதுபோன்ற முரண்கள் உடனடியாக தீர்க்கப்படவேண்டியது. பட்டுக்கூடு வியாபாரத்தை நம்பி நிறைய இஸ்லாமிய குடும்பங்கள் கோலார் மாவட்டத்தில் இருக்கின்றனர். இந்து வியபாரிகளிடம் மட்டும் விவசாகிகள் பட்டுக்கூடு விற்பனை செய்ய வேண்டும், முஸ்லிம் வியாபாரிகளிடம் பட்டுக்கூடு விற்பனை செய்யக்கூடாது என கூறுவது சரியல்ல. பட்டு விவசாயிகள், பட்டு நூற்பு தொழிலாளர்கள் என அனைவரும் பிற மதத்தினரை, சமுதாயத்தினரை நம்பிதான் தொழில் செய்து வருகிறோம்’ என கூறினர்.

 

Related posts