Editor's Picksஇந்தியாசமூகம்விவசாயம்

பருத்தி உற்பத்தி குறைவு -ஒரு தீவிர பிரச்சனை: வெங்கையா நாயுடு கருத்து!

சர்வதேச அளவில் பருத்தி விலை கடந்த ஓராண்டில் ஏறக்குறைய இரு மடங்காக உயர்ந்துள்ள நிலையில், உலகளாவிய தேவை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தியாவின் சராசரி விளைச்சல் உலக சராசரி விளைச்சலை விட மிகக் குறைவாக உள்ளதால் உள்நாட்டு ஆடை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று வெங்கையா நாயுடு அவர்கள் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு செவ்வாயன்று இந்தியாவின் பருத்தி உற்பத்தியில் உள்ள சிக்கல்களை குறித்து பேசுகையில், பருத்தியின் விலை உயர்ந்தாலும் நமது சராசரி விளைச்சல் உலக சராசரி விளைச்சலை விட மிகக் குறைவாக உள்ளது. இந்நிலைமையை கருத்தில் கொண்டு தீர்வு காண முறையான பகுப்பாய்வு செய்ய வேண்டும் என தொழில்துறை மற்றும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

விவசாயிகளுக்கு முறையான விதைகள் மற்றும் ஆலோசனைகள் வழங்குதல் தவிர, ஆராய்ச்சியாளர்களின் தலையீடு பருத்தி உற்பத்தியை பெருக்க வழி வகை செய்யும் என்றும் குறிப்பிட்டார்.

“உலகின் பருத்தி சாகுபடியில் இந்தியா கிட்டத்தட்ட 39% பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால், விளைச்சல் நிலமாக 23% மட்டுமே உள்ளது. இது ஒரு தீவிர பிரச்சினை ஆகும். இதை அமைச்சகம், தொழில்துறை மற்றும் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். ஒரு ஏக்கருக்கு உற்பத்தியாகும் பருத்தி அளவில் நாம் ஏன் பின்தங்குகிறோம் என்பதை பகுப்பாய்வு செய்ய வேண்டும்” என்று வெங்கையா நாயுடு இந்திய ஜவுளி தொழில் கூட்டமைப்பு- பருத்தி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி சங்கத்தின் (CITI-CDRA) பொன்விழாவில் கூறினார்.

துருக்கி, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளால் ஹெக்டேருக்கு 1,800 கிலோ மகசூல் பெறமுடிகிறது. ஆனால், இந்தியாவில் ஹெக்டேருக்கு 460 கிலோ மட்டுமே விளைச்சல் உள்ளது. இது உலக சராசரியான 800 கிலோ/ஹக்டரை விட குறைவாக உள்ளது.

Related posts