அறிவியல்

உலகம் கொண்டாட தவறிய அறிவியல் மாமேதை டெஸ்லா !

நிகோலா டெஸ்லா, 1856 ஜூலை மாதம் 10 ஆம் நாள் தற்போதைய குரோஷியா இருக்கும் பகுதியில் உள்ள ஸ்மில்ஜன் [Smiljan, Croatia] எனும் இடத்தில் பிறந்தார். வரலாற்றில் பெரும் மாற்றம் உண்டாக்கப்போகும் ஒருவர் பிறக்கும் போது அதற்கான அறிகுறிகளை காலம் உருவாக்கிக்கொடுப்பது உண்டு. அதை பல சாதனையாளர்களின் பிறப்பு சம்பவங்கள் நமக்கு காட்டியுள்ளன. நிகோலா டெஸ்லா பிறக்கும் நேரத்தில் அந்த இடத்தில் கடுமையான புயல், மின்னல், மழை என வானிலை மோசமாக இருந்துள்ளது. அப்போது பிரசவத்தை பார்த்துக்கொண்டிருக்கும் பணிப்பெண், இந்த மாதிரி அபசகுனமான நேரத்திலா குழந்தை பிறக்க வேண்டும் என வருத்தத்தோடு கூறினாள். டெஸ்லாவின் அம்மா அப்போது வெளிப்புறத்தில் பார்த்தார் அப்போது மின்னல்களும் வெட்டிக்கொண்டிருப்பதை கண்ட அவர் ‘இவன் இருளின் குழந்தை அல்ல. இவன் ஒளியின் குழந்தை’ என கூறினார்.

தான் இவ்வளவு பெரிய விஞ்ஞானியாக வருவதற்கு காரணம் தனது அம்மா டுகா மேண்டிக் தான் என குறிப்பிடும் டெஸ்லா தனது அம்மாவுக்கு Eidetic memory எனும் சிறப்புத்திறன் இருந்ததாக குறிப்பிடுகிறார். Eidetic memory [ஈடெடிக் நினைவகம்] என்பது எப்போது ஒருமுறை பார்த்த விசயங்களை துல்லியமாக நினைவில் கொண்டு வந்து விளக்குவது. கூடவே, பெரிதாக படிக்காத தனது அம்மா வீட்டில் இருக்கும் போது வீட்டிற்கு தேவையான சில உபகரணங்களை தானே உருவாக்கியுள்ளார் எனவும் நினைவு கூறுகிறார். டெஸ்லாவின் அப்பா மிலுடின் டெஸ்லா ஒரு பாதிரியார்,

பொறியியல் படிக்க ஆஸ்திரியா நாட்டில் இருக்கும் கிராஸ் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கே மிகவும் ஆர்வத்தோடு பயிலவும் ஆரம்பித்தார். இயல்பிலேயே அவரது அம்மாவின் நினைவுத்திறன் டெஸ்லாவிற்கும் இருந்தது. ஆகவே கணிதம் அவருக்கு எளிதானதாக இருந்தது. 8 மொழிகள் அறிந்தவராகவும் அவர் இருந்தார். படிப்பில் சுட்டியாக இருந்தபோதும் கூட அவர் முழுமையாக படிப்பை முடிக்கவில்லை.

ஐரோப்பா நாட்டிற்கு சென்ற டெஸ்லா அங்கே ஒரு தொலைபேசி நிறுவனத்தில் எலக்ட்ரீஷியனாக பணிக்கு சேர்ந்தார். 1882 ஆம் ஆண்டு பாரிஸ் நகரத்தில் குடியேறினார் டெஸ்லா. அங்கே எடிசனின் எலெட்ரிக் நிறுவனத்தின் பிரெஞ்சு கிளையில் பணிக்கு சேர்ந்தார். அங்கே அவர் வீடுகளுக்குள் மின்விளக்கு பொருத்துவது போன்ற வேலையில் ஈடுபடுத்தப்பட்டார். டைனமோ மற்றும் மோட்டார் தயாரிக்கும் வேலைகளில் அவர் ஈடுபடுத்தப்பட்டார். அவருக்கிருந்த திறமையின் காரணமாக எடிசனின் பிற கிளைகளில் உள்ள பிரச்சனைகளை சரி செய்யவும் அவர் அனுப்பப்பட்டார். இரண்டு ஆண்டுகள் கழித்து 1884 ஆம் வருடம் டெஸ்லாவின் மேனேஜர் ஒரு வாய்ப்பை வழங்கினார். நியூயார்க் நகரத்தில் செயல்பட்டு வரும் எடிசன் மெஷின் ஒர்க்ஸ் இல் பணி வாய்ப்பு இருப்பதாக கூறினார். அதனை ஏற்று டெஸ்லா அமெரிக்கா புறப்பட்டார்.

எடிசனின் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றினார் டெஸ்லா. இதனால் டெஸ்லாவின் மீது எடிசனுக்கு எடிசன் மீது டெஸ்லாவிற்கும் நல்ல மதிப்பு இருந்தது. எடிசன் நேரடி மின்னோட்டத்தின் [DC] ஆராதரவாளராக இருந்தார். நேரடி மின்னோட்டத்தில் மின்சாரம் ஒரே திசையில் மட்டும் பாயும். ஆனால் டெஸ்லாவோ மாற்று மின்னோட்டத்தின் (AC) ஆதரவாளராக இருந்தார். இதில் மின்சாரம் குறிப்பிட்ட இடைவெளியில் திசையை மாற்றிக்கொள்ளும். இன்று நம் வீடுகளுக்கு பல கிலோமீட்டரில் இருந்து மின்சாரம் அனுப்பப்படுவது டெஸ்லாவின் AC முறையில் தான். இந்த முறையை பயன்படுத்துவதனால் மின்சார இழப்பு பெருமளவில் குறைகிறது மற்றும் எவ்வளவு தொலைவிற்கும் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும் .

டெஸ்லாவின் AC பல சிறப்பு அம்சங்களை கொண்டிருப்பது எடிசனுக்கும் தெரியும். ஆனால் அவர் தான் கண்டறிந்த DC தான் சிறந்தது என்பதை வலியுறுத்திக்கொண்டே இருந்தார். இதற்குக் காரணம், அவர் காப்புரிமை வாங்கி வைத்திருந்த சாதனங்கள் DC யில் இயங்கும் விதத்திலேயே வடிவமைக்கப்பட்டு இருந்தது தான்.
இதற்கிடையில் டெஸ்லாவின் மேனேஜர் எடிசன் நிறுவனத்தில் DC யில் இயங்கும் ஒரு மெசினை மேம்படுத்தி தரும்படி கேட்டுக்கொண்டார். அதை செய்துதந்தால் $50,000 தருவதாகவும் சொன்னார். ஆனால் மெசினை டெஸ்லா மேம்படுத்தி கொடுத்த பிறகு சொன்னபடி $50,000 தரப்படவில்லை. இதற்கு பிறகு எடிசனுடன் ஏற்பட்ட சில மனஸ்தாபங்களால் அங்கிருந்து வெளியேறி 1885 இல் சொந்தமாக ஒரு எலெக்ட்ரிக் நிறுவனத்தை ஆரம்பித்தார் டெஸ்லா. ஆனால் நிதிச்சிக்கல்களால் அதுவும் கைகூடவில்லை.

ஆனால் காலம் அவருக்கு மீண்டுமொரு வாய்ப்பை அளித்தது. 1887 ஆம் ஆண்டு AC மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின்மோட்டார் ஒன்றினை வடிமைத்தார் டெஸ்லா. இந்த மோட்டார் மின் ஆற்றலை குறைந்த இழப்பில் இயக்க ஆற்றலாக மாற்றித்தந்தது.

எலெட்ரிக் சந்தையில் கொடிகட்டி பறந்த ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் டெஸ்லாவின் AC மோட்டார் பற்றிய செய்தியை அறிந்தார். இந்த மோட்டாரை கொண்டு எடிசனின் DC மோட்டாருக்கு சவால் கொடுக்க முடியும் என நம்பினார். இவர்கள் இருவருக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. சுமார் $60,000 க்கு காப்புரிமை பரிமாறிக்கொள்ளப்பட்டது. அதோடு பங்கு மதிப்பும் லாயல்டியும் வழங்கப்பட்டது. மேலும் அந்த நிறுவனம் டெஸ்லாவை ஆலோசகராகவும் பணியில் அமர்த்திக்கொண்டது. அவருக்கு அப்போது மாதம் ஒன்றுக்கு $2000 ஊதியமாக வழங்கப்பட்டது. தற்போதைய மதிப்பில் $50,000. இந்த தருணத்தில் தான் டெஸ்லாவிற்கும் எடிசனுக்கு நேரடியாக போட்டி ஆரம்பித்தது.

டெஸ்லாவின் AC மின்சாரம் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என்பதை மக்களிடம் பரப்புவதற்கு நேரடியாகவும் ரகசியமாகவும் பல வேலைகளை செய்தார். யானை உள்ளிட்ட விலங்குகளுக்கு பொதுவெளியில் AC மின்சாரம் பாய்ச்சி இறக்க வைப்பது, எலெட்ரிக் நாற்காலியை பயன்படுத்தி AC மின்சாரம் பற்றிய பயத்தை மக்களிடத்தில் கொண்டு போனது என பல வேலைகளை செய்தார். எடிசன் இப்படி பல்வேறு வேலைகளை வெஸ்டிங்ஹவுஸ் & டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக செய்துகொண்டிருக்க அவர்களோ வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்தனர். அவர்கள் World Columbian Exposition எனும் நிகழ்வை நடத்த வேலைகளை செய்துகொண்டிருந்தார்கள். இது அமெரிக்காவை கண்டறிந்த கொலம்பஸ் அவர்களின் 400 வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டது. 27 மில்லியன் மக்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வின் மூலமாக ஒரு விசயம் நிறுவப்பட்டது. ஆமாம், எதிர்கால உலகத்தை ஒளிர செய்யப்போவது AC மின்சாரம் தான் என்பது நிறுவப்பட்டது.

டெஸ்லா மேலும் வெற்றிகளை சுவைக்க ஆரம்பித்தார். ஆமாம், AC மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய ஆலை ஒன்றினை நயாகரா பகுதியில் நிறுவினார்கள். இதன் மூலமாக மின்சாரம் வெற்றிகரமாக எடுக்கப்பட்டது. ஆனால் டெஸ்லாவின் ஏறுமுகத்தில் சறுக்கல்கள் விழத்துவங்கியது, வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் கடும் நிதி சிக்கலில் மாட்டிக்கொண்டது. 10 மில்லியன் டாலர் அளவுக்கு கடன்சுமை ஏற்பட்டது. 1897 ஆம் ஆண்டு ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் டெஸ்லாவிடம் சென்று லாயல்டியை விட்டுத்தருமாறு கேட்டுக்கொண்டார். இதனால் தனக்கு பெரும் இழப்பு ஏற்படும் என்பதையும் அறிந்து டெஸ்லா அதற்கு ஒப்புக்கொண்டார். இதற்கு மிக முக்கியக்காரணம், அவர் ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் தனது நண்பராக ஏற்றுக்கொண்டிருந்தது தான். நண்பரின் நிறுவனம் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக இதனை ஒப்புக்கொண்டார். அவர் விட்டுக்கொடுத்தது சுமார் 12 மில்லியன் டாலர், இன்றைய மதிப்பில் 300 மில்லியன் டாலர்கள்.

டெஸ்லாவின் உதவிக்கு கைமாறாக டெஸ்லாவின் AC காப்புரிமையை காலம் முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வெஸ்டிங்ஹவுஸ் நிறுவனம் 2,16,000 டாலர்களை கொடுத்தது. தனக்கு கிடைத்த பணத்தைக்கொண்டு நியூயார்க் நகரத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு நிலையங்களை துவங்கினார். டெஸ்லா பெயரில் மட்டும் 300 க்கும் மேற்பட்ட காப்புரிமைகள் இருந்தன. எக்ஸ் ரே தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களில் வல்லவராக இருந்தார் டெஸ்லா. டெஸ்லாவின் முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்று டெஸ்லா காயில் டெஸ்லா சுருள் [tesla coil]. இதன் மூலமாக அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரத்தை உருவாக்க முடியும். இதனைக்கொண்டு ரேடியோ அலைகளை குறிப்பிட்ட அதிர்வெண்ணில் அனுப்பவும் பெறவும் முடியும்.

இப்படி போய்க்கொண்டிருந்த டெஸ்லாவின் வாழ்க்கையில் பல சூழ்ச்சியாளர்கள் செய்த சதியால், கடும் நிதிச்சிக்கலுக்கு ஆளாகினர் டெஸ்லா. தனது இறுதி நாட்களை நியூ யார்க் நகரத்தில் உள்ள ஒரு தாங்கும் விடுதியின் சிறிய அறையில் கழித்தார்.

டெஸ்லா ஒன்றும் இல்லாதவராக தனது இறுதிக்காலத்தை அடைந்ததற்கு அவர் சிறந்த முதலாளித்துவவாதியாக இல்லாமல் இருந்தது தான். அதற்கு காரணம், அவர் பணத்தின் மீது எப்போதும் அக்கறை கொண்டதில்லை. மாறாக, மனித இனத்தின் மேம்பாட்டின் மீது தான் அதிக அக்கறை கொண்டவராக அவர் இருந்தார். அவர் இந்த உலகை மாற்றிட தனது பங்கை வெகு சிறப்பாகவே செய்திருக்கிறார்.

Related posts