மிக குறைந்த செலவில் சுற்றிப்பார்க்க ஐரோப்பிய கண்டத்தில் எத்தனையோ இடங்கள் உள்ளன. அவற்றுள் ஒன்று தான் ஹங்கேரி . கிழக்கு ஐரோப்பிய நாடான ஹங்கேரியின் தலைநகரம் புடாபெஸ்ட் (Budapest ) ஆகும். இந்த நகரத்தை விளக்குகளின் நகரம் (City of Lights ) என்று செல்லமாக அழைக்கின்றனர் ஹங்கேரி நாட்டவர்.
துருக்கி நாட்டு படையெடுப்பு முதல் இத்தாலிய புதுமைவாத கட்டிட காலிகள் வரை அனைத்து அம்சங்களையும் தன் வரலாற்றில் பதிவு செய்து வைத்திருக்கிறது ஹங்கேரி.
தலைநகரம் மட்டுமல்லாமல், சிறு சிறு ஊர்களும், கிராமங்களும் கூட கண்ணுக்கு விருந்தளிக்கும் அழகை பதுக்கி வைத்திருக்கின்றன.
மலைகள், ஏரிகள் , ஆறுகள் என இயறக்கை அன்னை தனது மொத்த அழகையும் இங்கு தான் நமக்கு காட்சிப்படுத்துகிறாள்.
Buda Castle, Budapest :
தலைநகரம் புடாபெஸ்டில் இருக்கும் இந்த அழகான அரண்மனை,யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு தொன்மை கட்டிடமாகும். 1686 ஆம் ஆண்டு, ஒட்டோமான் சாம்ராஜ்யத்தின் படையெடுப்பால் அழிக்கப்பட்ட ஒரு அரண்மனையின் மீது புதிதாக எழுப்பப்பட்ட அரண்மனை தான் இது. பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டிமுடிக்கப்பட்ட இந்த பிரம்மாண்ட அரண்மனையில் 200 க்கும் மேற்பட்ட அறைகள் உள்ளன.61 மீட்டர் உயரம் கொண்ட வளைவான dome கூரையும் இந்த அரண்மனையின் பிரம்மாண்டத்தை மேலும் கூட்டுகிறது.
டானுபே ஆறு (Danube River) :
ஹங்கேரி நாட்டின் வடக்கு பகுதி முதல் தென் பகுதி வரை பாயும் நதி தான் டானுபே. புடாபெஸ்ட் நகரம் வழியே ஓடும்போது இந்த ஆறு இரண்டாக பிரிகிறது. ஆற்றின் குறுக்கே பல பாலங்கள் இருந்தாலும் freedom bridge எனப்படும் சுதந்திர பாலம் தான் மிகவும் சிறப்பு பெற்றது. அந்த பாலத்தின் மீது நின்று பார்த்தல் சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனம் இரண்டும் இந்த ஆற்றின் மீது ஓவியம் வரையும் அழகை கண்டு ரசிக்கலாம். டானுபே நதியில் பல சிறு சிறு படகுகள் செல்வதும் அந்த நதியின் அழகைக் கூட்டுகிறது.
இந்த நதியில் பயணித்தால் Danube Bend எனப்படும் வளைவு வருவதை காணலாம், அடர்ந்த காடுகள் நிறைந்த Visegrád மலைகளுக்கு அருகில் இந்த நதி வளைந்து செல்லும் இடம் பல சுற்றுலா பயணிகள் இளைப்பாறி இயற்கையை ரசிக்க ஏற்ற இடமாக தேர்வு செய்துள்ளனர்.
The Danube Cycle Path என்னும் வழித்தடமும் மிக பிரபலம்.புடாபெஸ்டுக்கும் வியன்னாவுக்கும் இடையில் அமைந்துள்ள மலைத்தொடரில் இருக்கும் இந்த பாதையில் மிதிவண்டி பயணம் செய்வது வாழ்வில் ஒரு முறையாவது செய்திருக்க வேண்டிய செயல் என கூறலாம்.
Historic Spa Towns :
சுற்றுலாவின் ஒரு பகுதியாக நம் மனதையும் உடலையும் சோர்வின்றி வைத்திருக்க உதவும் ஸ்பா (Spa) எனப்படும் குளியலும் இந்த ஹங்கேரி நாட்டில் பிரபலம், இதற்கென்றே தனியாக ஊர்களும் உள்ளன. துருக்கி நாட்டு மசாஜ் மற்றும் குளியலுக்கென்றே பிரத்யேகமாக கட்டப்பட்ட கட்டிடங்களும் உள்ளன. 1000 வெந்நீர் ஊற்றுகளுக்கு மேல் இங்கு உள்ளன. வெது வெதுப்பான நீரில் இறங்கி உடல் சோர்வை போக்கியபடியே இயற்கையை ரசிப்பதெல்லாம் என்னவென்று சொல்வது?? சொர்க்கம் தான்!
Esztergom Basilica :
1507 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த தேவாலயம் டானுபே நதியின் ஓரத்தில் ஒரு குன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது. கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த பிரம்மாண்ட கட்டிடம் 100 மீட்டர் உயரம் கொண்டதாக இருக்கிறது. இந்த தேவாலயத்தின் உள்ளே உள்ள ஆல்டர் எனப்படும் இடத்தில் 14 மீட்டர் நீளம் கொண்ட ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. இதுவே உலகின் நீளமான ஓவியமாக கருதப்படுகிறது. தேவாலயத்தின் அடியில் 1831 ஆம் ஆண்டு கட்டப்பட்ட பாதாள அறைகளும் உள்ளன. இங்கே பல விலைமதிப்பற்ற பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
1856 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 11 மீட்டர் நீளம் கொண்ட உலகின் நீளமான ஓர்கன்(Organ) என்னும் இசைக்கருவி இந்த தேவாலயத்தில் தான் உள்ளது.
Hungarian Parliament Building, Budapest :
நீங்கள் டானுபே நதியில் படகு சவாரி செய்துகொண்டிருந்தாலும் சரி, குன்றின் மீது அமைக்கப்பட்ட அரண்மனை மீது நின்று பார்வையிட்டாலும் சரி, இந்த புடாபெஸ்ட் நகரத்தின் பாராளுமன்ற கட்டிடம் உங்கள் கண்களில் கண்டிப்பாக சிக்கும். மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டிருக்கும் இந்த கட்டிடம், இரவில் மின்விளக்குகள் வெளிச்சத்தில் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக காட்சியளிக்கும்.

இந்த பாராளுமன்ற கட்டிடத்திற்குள் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் மிகவும் பெரியதாக இருக்கும் ஒரு சில பாரமன்றங்களில் இதுவும் ஒன்று. உள்ளே 690 அறைகளுக்கும் மேல் உள்ளன. இந்த பிரம்மாண்ட பாராளுமன்ற கட்டிடத்தின் பிம்பம் டானுபே நதியில் விழுவது பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும்.
ஹங்கேரி நாட்டில் சுற்றி பார்ப்பதற்கு இன்னும் நிறைய இடங்கள் உள்ளன. அவற்றையெல்லாம் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
