இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி சீன உளவு கப்பல் இலங்கையில் உள்ள அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு இன்று சென்றுள்ளது.
இந்தியா எதிர்ப்பு
இந்தியாவின் கடும் எதிர்ப்பை மீறி அம்பன்தோட்டா துறைமுகத்திற்கு சீன உளவுக் கப்பலான ‘யுவான் வாங் 5 இன்று காலை வந்தடைந்துள்ளது. இன்று அம்பன்தோட்டா துறைமுகத்துக்கு வந்த சீன உளவுக் கப்பல் வரும் 22ம் தேதி வரை அங்கு நிறுத்தப்பட்டு இருக்கும். இந்த 7 நாட்களில் அறிவியல் ஆராய்ச்சி பணிகளில் அந்த கப்பல் ஈடுபடக் கூடாது என இலங்கை அறிவுறுத்தியுள்ளது. இந்த கப்பல் 222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. மேலும், உளவு கப்பல் 11 ஆயிரம் டன் கொள்ளளவை கொண்டது. கடல் சார் அறிவியல் கண்காணிப்பு, விண்வெளி கண்காணிப்பு, உள்பட பிரமாண்டமான ராக்கெட்டுகளை ஏவும் வசதிகளும் இந்த கப்பலில் உள்ளது.
தமிழகத்தில் இருந்து சுமார் 150 கி.மீ தொலைவில் அம்பன்தோட்டா துறைமுகம் இருக்கிறது. ஆனால் இந்த உளவு கப்பல் மூலம் 750 கி.மீ சுற்றளவுக்குள் உள்ள அனைத்தையும் துல்லியமாக கண்காணிக்கக்கூடியவை என தகவல் தெரியவருகிறது. சீனாவின் தேசிய விண்வெளி ஆய்வு மையத்தால் இந்த கப்பல் இயக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்திய எல்லைக்கு மிக மிக அருகில் சீன உளவு கப்பல் நெருங்கி சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த உளவுக் கப்பலால் இந்தியாவின் பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் என இந்திய தரபில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

