மறைமலைநகர் அருகே மாயமான 8ம் வகுப்பு மாணவர் குளத்தில் பிணமாக மீட்கப்பட்டார்.
பள்ளி மாணவர் பிணமாக மீட்பு
செங்கல்பட்டு மறைமலைநகர் அடுத்த கீழக்கரணையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் திலீபன் (13). இவர் அதே பகுதியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 3ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த திலீபன் மாயமானதாக கூறப்படுகிறது. இது குறித்து அவரது தந்தை ஆனந்தன் மறைமலைநகர் காவல்துறையில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீபனை தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் கீழக்கரணை அருகே செங்குன்றம் ஏரியில் ஒரு சிறுவனின் உடல் மிதப்பதாக அப்பகுதி மக்கள் மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது ஏரியில் மூழ்கி இறந்து கிடந்த சிறுவன் காணாமல் போன திலீபன் என்பது தெரியவந்தது. இதனையடுத்து திலீபனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

