அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று வாலிபர் சங்கத்தினரும், மாணவர் சங்கத்தினரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அக்னிபத் போராட்டம்
இந்தியா முழுவதும் அக்னிபத் திட்டத்திற்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்று இந்திய மாணவர் சங்கத்தினரும் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு பகுதியாக கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவையில் போராட்டம்
ரயில் நிலையம் முன்பு திரண்ட அவர்கள் மத்திய அரசிற்கு எதிராகவும், அக்னிபத் திட்டத்திற்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பியபடி ரயில் நிலையத்திற்குள் நுழைய முற்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறைனர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
ரயில் மறியல்
ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கைது செய்யப்பட்ட சிறிதுநேரத்தில் 40ம் மேற்பட்ட இந்திய மாணவர் சங்கத்தினர் ரயில் நிலையத்தின் பின்புறம் வழியாக ரயில் நிலையத்திற்குள் நுழைந்தனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கோவை – நாகர்கோவில் செல்லும் ரயில் முன்பாக மாணவ மாணவியர் மறியலில் ஈடுபட்டனர். ரயில் நிலையத்திற்குள் திடீரென நுழைந்து மாணவ மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அதிர்ச்சியடைந்த ரயில்வே போலீசாரும், கோவை மாநகர காவல் துறையினரும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை கைது செய்ய முயன்றனர்.
கைது நடவடிக்கை
இதனையடுத்து, மாணவர்கள் கைது நடவடிக்கைக்கு உடன்பட மறுக்கவே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ சங்கத்தினரை குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ய முயன்றனர். அப்போது காவல் துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. இந்நிலையில், இதனையடுத்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை கைது செய்தனர். ரயில் நிலைய வளாகத்தில் நடைபாதையில் முழக்கங்கள் எழுப்பியபடி வந்த மாணவர்கள் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர். இந்திய ராணுவத்தை ஆர்.எஸ்.எஸ் மயமாக்கும் முயற்சியே இந்த அக்னிபத் திட்டம் எனவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
மாணவர்கள் முழக்கம்
கோவை ரயில் நிலையத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரும், இந்திய மாணவர் சங்கத்தினரும் அடுத்தடுத்து நடத்திய போராட்டங்கள் காரணமாக கோவை ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பான சுழல் நிலவியது. அதேபோல, திருவாரூர் மாவட்டத்திலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.