ஆன்மீகம்

நாடி ஜோதிடம்! – சித்தர்கள் வகுத்த தெய்வீக கலை!

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்களும் மகான்களும் வருங்கால சந்ததியினர் பயன் பெரும் வகையில் பல குறிப்புகளை ஓலைச்சுவடிகள் மூலம் எழுதிவைத்துள்ளனர். அந்த வகையில் ஒரு மனிதனின் வாழ்வில் நடக்கவிருக்கும் அனைத்து விடயங்களை பற்றியும் ஓலைச்சுவடியில் எழுதிவைத்துள்ளதையே நாடி ஜோதிடம் என்கிறோம்.

ஆண்கள் வலது கை கட்டை விரல் ரேகையும், பெண்கள் இடது கை கட்டை விரல் ரேகையும் கொண்டு நாடி ஜோதிட ஏடுகள் கணிக்கப்படுகின்றன.

பல்லாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த ஓலை சுவடிகளை சப்தரிஷிகளான அகத்தியர், கௌசிகர், வைசியர், போகர்,பிரிகு, வசிஸ்டர், மற்றும் வால்மீகி ஆகியோர் எழுதியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும் பெரும்பாலான சுவடிகளை அகத்தியரே எழுதியதாக நம்பப்படுகிறது.

ஒருவருடைய கைரேகைக்கான ஓலை கிடைக்கப்பெற்றால், அவர் பிறந்த தேதி, அவருடைய பெயர், தாய் தந்தையர் பெயர், சகோதர சகோதரி பற்றிய விவரம், வாழ்வில் நடக்கக்கூடிய முக்கிய நிகழ்வுகளை பற்றிய விவரம் இப்படி பல தகவல்களை அறியமுடியும்.

இந்த ஏடுகளை அகத்தியர் என்று அறியப்படும் ஒருவர் அல்லது பலர் எழுதியிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. ஒருவர் குறித்து இவ்வாறு எழுதிவைக்கப்படும் ஏடுகள் பல காண்டங்களாக அமைகின்றன. இவற்றில் 12 காண்டங்களும் 4 தனிக்காண்டங்களும் அடக்கம்.

பன்னிரண்டு காண்டங்கள் :

முதல் காண்டம் – வாழ்க்கையின் பொதுப்பலன்கள்.

இரண்டாம் காண்டம் – குடும்பம், வாக்கு, கல்வி, தனம், நேத்திரம் ஆகியவற்றின் பலன்.

மூன்றாம் காண்டம் – சகோதரர்கள் தொடர்பான விடயங்கள்.

நான்காவது காண்டம் – தாய், மனை, நிலங்கள், வாகனம், வீடு மறும் வாழ்க்கையில் அடையும் சுகங்கள் பற்றிய தகவல்.

ஐந்தாம் காண்டம் – பிள்ளைகள் பற்றி கூறுகிறது.

ஆறாம் காண்டம் – வாழ்க்கையில் உள்ள எதிரிகள், நோய், கடன் பற்றி கூறுகிறது.

ஏழாம் காண்டம் – திருமணம் மற்றும் வாழ்க்கைத்துணை பற்று கூறுகிறது.

எட்டாம் காண்டம் – உயிர்வாழும் காலம், ஆபத்துக்கள் பற்றி கூறுகிறது.

ஒன்பதாம் காண்டம் – தந்தை, செல்வம், யோகம், குரு பற்றி கூறுகிறது.

பத்தாவது காண்டம் – தொழில் பற்றி கூறுகிறது.

பதினோராம் காண்டம் – லாபங்கள் பற்றி கூறுகிறது.

பன்னிரண்டாம் காண்டம் – செலவு, அடுத்த பிறப்பு, மோட்சம் பற்றி கூறுகிறது.

தனி காண்டங்கள் :

சாந்தி காண்டம் – வாழ்வில் உள்ள பிரச்சனைகள், கர்மவினை போன்றவற்றிற்கான பரிகாரங்கள் பற்றி கூறுகிறது.

தீட்சை காண்டம் – மந்திரம், யந்திரம் போன்றவை பற்றி கூறுகிறது.

ஔஷத காண்டம் – மருத்துவம் பற்றி கூறுகிறது.

திசாபுத்தி காண்டம் – வாழ்க்கையில் நடக்கும் திசைகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றி கூறுகிறது.

Related posts